கிளிநொச்சியில் சினோபாஃம் தடுப்பூசி வழங்கலின் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 04ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
சினோபாஃம் தடுப்பூசி பெற்ற கிளிநொச்சி மக்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் திகதி இன்றாகும் (28). இதன் அடிப்படையில் தடுப்பூசியை பெறுவதற்காக ஊரடங்கின் மத்தியிலும் அங்கு சென்ற மக்கள் தடுப்பூசி செலுத்தப்படாமையால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை எமது செய்தியாளர் தொடர்புகொண்டு கேட்டார்.
அதற்கு பதிலளித்த பணிப்பாளர்,
இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் தொடர்பிலான தகவல் சற்று முன்னரே தமக்கு கிடைத்ததாகவும் அதன் அடிப்படையில் எதிர்வரும் 04ஆம் திகதி அவை தமக்கு கிடைக்கப்பெறும் என்றும் அதன் அடிப்படையில் அவற்றினை 04 அல்லது 05ஆம் திகதி முதல் செலுத்த முடியும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.