ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிரிவினரால் (ISIS-K) காபூல் விமானநிலையத்திற்கு மிகப்பெரிய தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.
புதிய ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பும் தலிபான்களின் எதிரியான ISIS-K பிரிவால் ‘மணிநேரத்திற்குள்’ நிகழக்கூடிய ஒரு ‘கடுமையான’ தாக்குதல் குறித்து ‘மிகவும் நம்பகமான அறிக்கை’ இருப்பதாக இங்கிலாந்து ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹெப்பியும் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
ஆப்கனில் கடந்த 15ஆம் திகதி தலிபான்கள் ஆதிக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 90,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காபூல்விமான நிலையத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தத் தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிரிவினர் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விமானநிலையத்தைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காத்திருக்கின்றனர். சிலர் மதில் சுவரை ஒட்டிய பகுதியிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில், விமானநிலையத்தில் அபே கேட், கிழக்கு கேட், வடக்கு கேட் உள்ளிட்டப் பகுதிகளில் குழுமியிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமானநிலையத்திற்குச் செல்ல வேண்டாம். ஒருவேளை நீங்கள் அந்தப் பகுதியில் இருந்தால் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள். அடுத்த அறிவிப்பு வரும்வரை பாதுகாப்பான இடங்களில் இருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிரிட்டன் அரசும், ஒருவேளை ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற உங்களுக்கு வேறு வழி ஏதும் இருந்தால், அதனை உடனே செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல கார் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படலாமென அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தாக்குதல் குறித்த நம்பகரமான உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த நாடுகள் அறிவித்துள்ளன.
இதையடுத்து, ஏராளமாக மக்கள் தப்பித்துக்கொள்ளும் முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு படையெடுக்கின்றனர்.
நேற்றிரவு தலிபான்களின் போட்டிப்பயங்கரவாதக் குழுவின் தாக்குதலின் உண்மையான ஆபத்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ISIS-K என்றால் என்ன?
ISIS -K இஸ்லாமிய அரசின் ஆறு அல்லது ஏழு பிராந்திய கிளைகளில் ஒன்றாகும். K என்பது கோரசன் பகுதியை குறிக்கிறது. இது வரலாற்று ரீதியாக நவீன ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை உள்ளடக்கிய மத்திய ஆசியா பகுதி கோரசன் என அழைக்கப்பட்டது.
2014 இல் பாகிஸ்தான் தலிபான்களிடமிருந்து பிரிந்து ISIS-K தொடங்கப்பட்டது, அதன் அசல் தலைவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்த பிராந்தியத்தின் வரலாற்றுப் பெயரான கோரசனின் பெயரைத் தங்களுக்குப் பெயரிட்டு, தீவிரவாதிகள் தொடர்ச்சியான கொடூரத் தாக்குதல்களைத் தொடங்கினர்.
மத்திய ஆசிய- பண்டைய கோரசன் பகுதியில் கலிபா ஆட்சியை நிறுவுவதே இவர்களின் இலக்கு. இதில் காபூலில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனை மீது 2020 இல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டனர்.
2015 இல் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் அதை அங்கீகரித்தனர்.
அதன் கோட்டைகள் கிழக்கு, வடக்கு ஆப்கானிஸ்தான் பகுதிகள், பாகிஸ்தானுடனான நங்கர்ஹார் மாகாணம் ஆகும்.
2018 ஆம் ஆண்டில் இந்த குழு ஆப்கானிஸ்தானின் வடக்கில் பலவீனப்படுத்தப்பட்டது. மேலும் 2019 இல் கிழக்கில் கடுமையாகத் தாக்கப்பட்டது. ஆனால் 2020 இல் அவர்கள் மீண்டும் ஒருங்கிணைந்து தொடர்ச்சியான பேரழிவு தரும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடங்கினர்.
ஐஎஸ்ஐஎஸ் ஆப்கன், பாகிஸ்தான் பிரிவு இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பல்வேறு கோர தாக்குதல்களை நடத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் என்றுகூட பாராமல் மசூதிகள், புனிதத் தலங்கள், பொது இடங்கள் ஏன் மருத்துவமனைகளிலும் கூட இந்தக் குழு தாக்குதல்களை நடத்தியுள்ளது. இவர்கள் பெரும்பாலும் சிறுபான்மையினர், ஷியா பிரிவு முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்துகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் போல் தலிபான்களும் சன்னி பிரிவு முஸ்லிம்கள் என்றாலும் கூட இந்த இரு குழுக்களும் எதிரெதிராக எதிரியாகவே செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.