“நம்முடைய தேவன், நம் மீது அன்பும் அருளும் மிக்கவராய் இருக்கிறார். எப்போதும் நம் மீது அவர் நோக்கமாய் இருக்கிறார். நாம் கடந்து செல்லும் சூழ்நிலைகள் அனைத்தையும் பற்றி அவர் எப்போதும் சிந்திப்பவராய் இருக்கிறார். எப்போதும் அவருடைய பார்வையை நம்மீது வைத்தபடியே இருக்கிறார்” என்று சங்கீதம் 139 கூறுகிறது.
ஆம், நாம் எந்த ஒரு ஆபத்தையோ அல்லது பிரச்சினையையோ கடந்து செல்லும் போது, இயேசு நமக்கு உதவி செய்வதுடன் அதில் இருந்து தப்பிக்கவும் வைக்கிறார். பல சமயங்களில் ஆபத்து நேரத்தில் அல்லாமல், அதற்கு முன்பே அவர் நம்மைக் காக்க விரைந்து வருகிறார். துன்பம் வரும்போது காக்கவும் செய்கிறார்.
விவிலியத்தில் தானியேல் 3-ம் அதிகாரத்தில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. தான் செய்து வைத்த சிலையை வணங்க மறுத்ததால், சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத் நெகோ ஆகிய மூன்று பேரையும் நெபுகத்னேசர் அரசன் தீச்சூளையில் போடும்படி கட்டளையிட்டான். அந்த தீச்சூளையையும் வழக்கத்தை விட ஏழு மடங்கு சூடாக்கும்படி ஆணை பிறப்பித்திருந்தான்.
படைவீரர்களில் பலசாலியான சிலர், அரசரின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக சாத்ராக்கு, மோசாக்கு, ஆபேத் நெகோ மூன்று பேரையும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளோடு அவர்களை கட்டி, தீச்சூளையில் போட தூக்கிக்கொண்டு சென்றனர். ஆனால் சூளை ஏழு மடங்கு அதிகமாய் சூடாக்கப்பட்டிருந்த படியால் மூன்று பேரையும் தூக்கிச்சென்றவர்களை அந்த தீப்பிழம்புகள் சுட்டெரித்துக் கொன்றது.
தேவனுடைய கரம் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகிய மூன்று பேருடன் இருந்தபடியால், தூக்கிச் சென்றவர்களை கொன்ற தீச்சூளையின் நெருப்பு பிழம்புகள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரை ஒன்றும் செய்யவில்லை. அவர்கள், மூன்று பேரும் எந்தவித பாதிப்பும் இன்றி தீச்சூளையின் நடுவில் போய் விழுந்தார்கள்.
கட்டப்பட்டவர்களாய் விழுந்த அவர்களின் கட்டுகளை விடுவித்த தேவன், அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர்களோடு நெருப்பின் நடுவில் உலாவி அவர்களை அரவணைத்தார். இதனைக் கண்டு நெபுகத்னேசர் அரசன், அவர்கள் மூன்று பேரையும் தீச்சூளைக்குள் இருந்து வெளியே வரும்படி கூறினான்.
அரசரின் அழைப்பின்படி அவர்கள் அந்த நெருப்பு பிழம்பைக் கடந்து வெளிவரும் போதும் கூட, அந்த நெருப்பு சூளை அணைக்கப்படவில்லை. எரிந்து கொண்டுதான் இருந்தது. தேவன் அவர்களோடு இருந்து பாதுகாத்தபடியால், கொட்டும் அருவி தண்ணீரின் ஒருபுறம் இருந்து மறுபுறம் ஊடாக கடந்து வருவது போல், அந்த நெருப்பு பிழம்புகளை கடந்து வந்தனர். அவர்கள் வெளியே வந்தபோது அவர்கள் மீது நெருப்புப் புகையின் நாற்றம் கூட இல்லை. அவர்களுடைய தலைமுடி மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை விவிலியத்தின் வாயிலாக அறிகிறோம்.
இந்த நிகழ்வு மட்டுமல்ல, தானியேல் சிங்கக் குகையில் தூக்கி போடப்பட்ட போது, அவர் உள்ளே விழுந்த பிறகு அல்ல, அதற்கு முன்பே சிங்கத்தின் வாய்கள் தேவனால் கட்டப்பட்டிருந்தன.
இதற்குக் காரணம் அவர்களுடைய பிரச்சினையின் போதல்ல, அதற்கு முன்பே தேவனுடைய கரம் அவர்களுடன் இருந்து பாதுகாத்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது. இன்றும் தேவன் தாமாகவே நம்முடைய பிரச்சினையின் போது அல்ல, அதற்கு முன்பிருந்தே நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார். அதனால்தான் எத்தகைய பிரச்சினைகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும், அவை நம்மை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இயேசு நம்மை காப்பார் என்பதை உணர்ந்தவர்களாய், இன்னும் அதிகமாய் தேவனோடு நெருங்கி வாழ்வோம்.