பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தாலும், அரசின் பிரதிபலிப்பு தெளிவாகும் வரையில் பாணின் விலையை அதிகரிக்கப் போவதில்லை என யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கா.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி முதல் பாண், கேக் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இறாத்தல் பாண் 5 ரூபாவினாலும், ஏனைய பேக்கரி உற்பத்திகள் 10 ரூபாவினாலும், ஒரு கிலோ கேக் 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கா.பாஸ்கரனை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியது.
“தற்போது சீனி, மாஜரின் போன்ற பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாணின் விலையை அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. எனினும், அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலையில் பாண் விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்புள்ளது.
எனவே, இந்த அறிவிப்பு தொடர்பான அரசின் பிரதிபலிப்பு வெளியாகும் வரை பாணின் விலையை அதிகரிப்பதில்லையென தீர்மானித்துள்ளோம். பாண் விலை அதிகரிப்பு பற்றிய செய்தியையடுத்து, அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் தெரிய வரும் என்பதால் காத்திருக்கிறோம்.
கட்டுப்பாட்டு விலையில்லாத ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள், அந்தந்த பிரதேச நிலைமையை பொறுத்து அதிகரிக்கும்“ என தெரிவித்தார்.