தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவுடன் இருந்து வருகிறார். டாக்டர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே அவர் ஓய்வில் உள்ளார். வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த போதிலும் அவரது உடல்நிலை இன்னும் முழுமையாக சீராகாமலேயே உள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். கொரோனா தொற்று ஏற்பட்ட போதும், உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரங்களிலும் அவர் அங்கேயே சிகிச்சை பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தநிலையில் விஜயகாந்துக்கு உடல் சோர்வு ஏற்பட்டதாகவும் இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் நந்தம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. நேற்று பிற்பகலில் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற விஜயகாந்த் இரவு 11 மணியளவில் வீடு திரும்பி உள்ளார்.