இன்றைய இளைஞர்கள் மைதானங்களை நாடுவதனூடாக ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பமுடியும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் கிராமங்களில் உள்ள கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்: இன்றைய இளைஞர்களை சிறந்த தலைமைத்துவ பண்புடையவர்களாக மிளிரச் செய்து அதனூடாக அடுத்துவரும் சந்ததியினருக்கு அவர்களை சிறந்த முன்னோடிகளாக்கி நாளைய தலைவர்களான இளைஞர்களை சிறந்த வழிகாட்டிகளாக மாற்றுவதற்காக இவ்வாறான கிராமத்திற்கான மைதான செயற்றிட்டம் அமையப் பெற்றுள்ளது.
இன்றைய சூழலில் இளையவர்கள் அதிகளவான மன உளைச்சல்களிற்கு அளாகி வருகின்றனர். போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் விளையாட்டுத் துறையிலிருந்த நாட்டம் குறைவடைந்து சென்றமையே இதற்கு முக்கிய காரணங்களாகின்றன. இதனால் இளையவர்கள் தொற்றா நோய்களுக்கு அதிகளவாக ஆளாகிவருகின்றமையால் சிறு வயதிலேயே மாத்திரைகளை பாவிக்க நேரிடுகிறது. உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் விளையாட்டுத்துறையிலிருந்த ஆர்வம் குறைந்து சென்றமைகளே இவற்றிற்கு காரணமாகின்றன.
இன்றைய சந்ததியினர் விளையாட்டுத்துறையிலிருந்து விலகிச் செல்லுகின்றமை அவர்களுடைய மன உறுதியின்மைக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. இதனால் சிறு தோல்விகளைக் கூட தாங்க முடியாதவர்களாக தவறான முடிவுகளை எடுக்கும் மன நிலையினை தோற்றிவித்துள்ளது. இதனாலேயே இன்றைய காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்துச் செல்லுகின்றதை புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் இவற்றை விட நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி இன்றைய இளைஞர்களை வீட்டிலிருந்தவாறே சகல விடயங்களையும் பெற்றுக்கொள்ளும் மன நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் மைதானங்களை விரும்பிச் செல்லுகின்ற தன்மைகள் முன்னைய காலப்பகுதிகளை விட வெகுவாக குறைவடைந்துள்ளன.
நவீன சுகாதார வசதிகள் பலவிருந்தும் பாரிய நோய்களிற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இளைஞர்கள் அண்மையிலுள்ள விளையாட்டு மைதானங்களை பயன்படுத்துகின்ற தன்மைகள் அதிகரிக்க வேண்டும். அதனூடாகவே செம்மையான இளைஞர்களை உருவாக்குவோம் என்கின்ற இவ் வேலைத்திட்டங்கள் உண்மையான நோக்கத்தை அடைந்த கொள்ளும் என தெரிவித்தார்.