காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களுக்கு தொலைபேசி ஒலிப்பதிவு மூலமாக தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பான சஹ்ரானின் பெயரில் அச்சுறுத்தல் விடுத்துள்ள விடயம் வேடிக்கை பார்க்கும் விடயமல்ல. இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பதை பொலிசார் தீவிரமாக ஆராய்ந்து சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இதற்கு என்ன கூறுகிறார் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி்தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கு சஹ்ரானின் பெயரில் குரல் பதிவு ஒன்றை சமூகவலைத்தளம் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர் கருத்து கேட்டபோது மேலும் கூறுகையில்-
காரைதீவு பிரதேச செயலாளர் முகநூலில் யாரோ ஒருவர் பதிவிட்ட இஸ்லாம் மதம் சம்மந்தமான பிழையான பதிவை அவரும் பரப்பினார் என்று அவருக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் தாம் அவ்வாறு முஸ்லிம் மதம் தொடர்பான அவதூறாக எந்த கருத்தையும் பதிவிடவில்லை என பலமுறை கூறியுள்ளார். இதனை நம்பதாத சிலர் பொலிஸ் முறைப்பாடுகளும் பல இடங்களில் செய்து வருகின்றனர். அதற்கான விசாரணைகளும் இடம்பெறுகின்றன.
இது இவ்வாறு இருக்கும் நிலைநில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு தலைவர் சஹ்ரானின் பெயரை குறிப்பிட்டு தாம் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்ட காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் கொலை அச்சுறுத்தல் குரல் பதிவுகளை சஹ்ரானின் பெயரில் அனுப்பியுள்ளமை இலங்கையில் இன்னும் சஹ்ரானின் பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் வேடிக்கை பார்க்கும் ஒரு சாதாரண விடயமாக எண்ணி அதை கைவிடமுடியாது. இதற்கு பின்னணியில் யார் யார் உள்ளனர் யார் காரைதீவு தவிசாளரின் தொலைபேசி இலக்கத்தை சஹ்ரான் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு வழங்கினார்கள். இலங்கையில் சஹ்ரான் அமைப்பு முகவர்கள் அம்பாறை மாவட்டத்தில் யார் உள்ளனர் என்ற விடயங்கள் ஆராயந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எஷ்.ஹரீஸ் அவர்கள் காரைதீவு பிரதேசபை தவிசாளர் கி.ஜெயசிறில் நபிகள் நாயகம் தொடர்பாக பதிவிட்ட கருத்துக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏன் மௌனம் காக்கிறது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஊடகங்களில் கேள்வி எழுப்பி இருந்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தவிசாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டு அறிந்து கொண்டோம். அவர் அவ்வாறான கருத்து எதுவும் பதிவிடவில்லை எனபதை எமக்கு ஆணித்தரமாக கூறிவிட்டார். அவ்வாறு தாம் அப்படி செய்யவில்லை என கூறும்போது எப்படி நடவடிக்கை எடுப்பது?.
தமிழ்தேசிய கூட்டமைப்பில் நடவடிக்கை எதிர்பார்க்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு எமது கட்சியூடாக நடவடிக்கை எதிர்பார்த்திருப்பின் ஏன் சட்ட்நடவடிக்கை எடுப்பதற்காக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது? பொலிசில் முறைப்பாடு செய்வதற்கு முன்னம் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் அணுகி இதற்கான ஒரு தீர்வை பெற ஏன் சிந்திக்கவில்லை. பொலிசில் முறையிட்டு விட்டு் தமிழ்தேசிய கூட்டமைப்பு மௌனம் சாதிக்கறது என கூறுவது எந்த வகையில் நியாயம்.
சரி நாம் கேட்கிறோம், காரைதீவு தவிசாளருக்கு சஹ்ரான் பெயரை பயன்படுத்தி கொலை அச்சுறுத்தல் குரல் பதிவு செய்தமைக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பதன் நோக்கம் என்ன?
காரைதீவு பிரதேச சபை முஷ்லிம் மக்கள் பிரதி நிதிகள் இதற்கான பதிலை கூறவேண்டும் இலங்கையில் சஹ்ரான் அமைப்பு இன்னும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இப்படி பலவிதமான வினாக்களை பலரும் கேட்கலாம் அல்வா?
எம்மை பொறுத்தவரை காரைதீவை பிரதேச சபை தமிழ் முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய ஒரு பிரதேச சபை இது தொடர்ந்தும் ஒற்றுமையாக எதிரகால அபிவிருத்தி் திட்டங்களை செய்ய வேண்டும் இந்த சபையில் யார் தவறாக அல்லது கருத்து முரண்பாடாக இருப்பின் அதனை பேசித்தீர்ப்பதே சிறந்த அணுகுமுறை அதைவிட்டு சஹ்ரானின் அமைப்பு மூலமாக கொலை எச்சரிக்கை விடுப்பது நிரந்தர தீர்வாகாது. அது இன முரண்பாட்டையே தோற்றுவிக்கும்.
இலங்கை அரசானது சஹ்ரானின் பெயரில் குரல் எச்சரிக்கை பதிவு செய்தவர்கள் இதற்கு உறுதுணையாக நின்றவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் கூறினார்.