பெகாசஸ் ஒட்டுக்கேட்பு பட்டியலில் திபெத் மதகுரு தலாய் லாமாவின் ஆதவாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோவின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த உளவு மென்பொருள் பெகாசஸ். இந்த மென்பொருளை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றன. தீவிரவாதம், போதைப் பொருள் தடுப்பு, ஆபாசப்படங்கள் தடுப்பு உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கும் வகையில் உலக நாடுகளின் இராணுவத்துக்கும் உளவு அமைப்புகளுக்கும் இந்த மென்பொருளை விற்பனை செய்வதாக என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டதாக தி வயர் இணையதளம் தெரிவித்தது.
இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி மூன்று நாட்கள் ஆகியும் வேறு எந்த அலுவலும் நடைபெற முடியாத அளவுக்கு அவைகளில் அமளி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தி வயர் இணையதளம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு பட்டியலில் திபெத் மதகுரு தலாய் லாமாவின் ஆதவாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இலக்கு பட்டியலில் குறிப்பிட்ட எண்கள் இருந்தது என்பதை மட்டுமே இப்போதைக்கு உறுதி செய்ய முடிந்ததாகவும் அந்த எண்கள் ஒட்டுகேட்கப்பட்டனவா என்பதை உறுதி செய்ய இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.