24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
உலகம்

ஜெப் பிசோஸை முந்திக்கொண்டு விண்வெளிக்கு சென்று வந்தார் பிரிட்டன் கோடீஸ்வரர்!

உலகின் முன்னணி பணக்காரரான அமேசன் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிசோஸ். வர்த்தகம் ஒருபுறம் இருந்தாலும், புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தை தொடக்கி விண்ணுக்கு ஆட்களை அனுப்பும் கனவுத் திட்டத்தை அவர் கையில் வைத்திருக்கிறார்.

அவரை முந்திக் கொண்டு விண்வெளிப்பயணம் ஒன்றை நடத்திக் காட்டி உள்ளார் பிரிட்டிஷ் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன். அவரது நிறுவனத்தின் பெயர் விர்ஜின் கெலாக்டிக் என்பதாகும். கடந்த 11ஆம் திகதி நியூ மெக்சிகோவில் இருந்து மேலும் 5 பேருடன் தமது VSS Unity என்ற குறுங்கலத்தில் அவர் விண்ணுக்குப் புறப்பட்டார்.

இந்த விண்கலத்தை Eve என்ற வானூர்தி சுமார்15 கிலோ மீட்டர் உயரத்திற்கு கொண்டு சென்றது. அதன்பின்னர் அதிலிருந்து பிரிந்த Unity சுமார் 80 கிலோ மீட்டர் உயரம் செங்குத்தாக சென்றது. புவியீர்ப்பு விசை இல்லாத வெற்றிடத்தில் சுமார் 5 நிமிடங்கள் இருந்த பிறகு Unity காற்று மண்டலத்தில் மீண்டும் நுழைந்து சாதாரண விமானம் போல தரையிறங்கியது.

தம்மை பிரான்சன் முந்திக் கொண்டாலும் மனம் தளராத ஜெப் பிசோஸ், வரும் 20 ஆம் திகதி அவரது நிறுவனம் வடிவமைத்த நியூ ஷெப்பர்டு என்ற விண்கலத்தில் தமது சகோதரர் Mark உடன் விண்ணுக்கு செல்ல உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

டெக்சாசில் இருந்து ஏவப்படும் அவரது நியூ ஷெப்பர்ட், பூஸ்டரின் உதவியுடன் கடல் மட்டத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்திற்கு செல்லும். அங்கு ஸீரோ கிராவிட்டியில் 3 அல்லது 4 நிமிடங்கள் இருந்த பிறகு பூஸ்டரின் இயந்திரம் மீண்டும் இயக்கப்பட்டு நியூ ஷெப்பர்ட் தரையிறங்கும் என்பது அவரது திட்டம்.

1996 லேயே விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ஜெப் பிசோஸ் அறிவித்தாலும், அது காலதாமதமாக நிறைவேறும் நாள் நெருங்கி வருகிறது.

பிரான்சன் மற்றும் டெஸ்லா அதிபர் எலான் மஸ்கிற்கு முன்னதாகவே ஜெப் பிசோஸ் தனது புளூ ஆரிஜினை தொடக்கிவிட்டார். 2008 ல் முதன் முறையாக விண்ணுக்கு தனியார் ரொக்கெட்டை அவர் அனுப்பினார். 2018 ல் பிரான்சன் விண்வெளி வீரர் ஒருவரையே அனுப்பி வைத்தார். இதற்கு முன்னர் பலர் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக விண்வெளிக்கு சென்றாலும், அது ஏதாவது ஒரு நாட்டின் விண்கலங்களில் மட்டுமே நடந்தது.

400 மில்லியன் டொலர் மதிப்புள்ள சர்வேதச விண்வெளி சந்தையில் ஏற்கனவே சுமார் 70 சதவிகிதம் வர்த்தக ரீதியிலான நடவடிக்கைகள் வாயிலாக நடக்கிறது.

புளூ ஆரிஜின், விர்ஜின் காலக்டிக், ஸ்பேஸ் எக்ஸ், ஓரியன் ஸ்பேன், போயிங் உள்ளிட்ட நிறுவனங்கள் புதுமையான திட்டங்களை செயல்படுத்த போட்டி போடுவதால், அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளி சுற்றுலாவுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் அமெரிக்க நிறுவனங்கள் முன்னிலையில் இருந்தாலும், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் அதில் ஒரு கை பார்க்க முடிவு செய்திருக்கின்றன.

வரும் 10 ஆண்டுகளில் பல விண்வெளித் திட்டங்களை நடத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டிருப்பதால், வரும் பத்தாண்டுகளை விண்வெளி தசாப்தம் என துறை சார்ந்த நிபுணர்கள் அழைக்கின்றனர்.

இதனிடையே விண்வெளி பயணத்தை பயன்படுத்தி நாடுகளுக்கு இடையேயான பயண நேரத்தை குறைப்பது பற்றியும் விமான சேவை நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.

எடுத்துக்காட்டாக நியூயோர்க்-ஷாங்காய் இடையேயான பயணத்தை வெறும் 39 நிமிடத்தில் மேற்கொள்ளும் திட்டம் ஒன்றை எலான் மஸ்க் வைத்திருக்கிறார். இதுவும் வரும் 10 ஆண்டுகளுக்குள் சாத்தியம் என கருதப்படுகிறது.

2030 ஆம் ஆண்டளவில் நீண்டதூர விமான சேவைகளுக்கு போட்டி அளிக்கும் வகையில், விண்வெளி வாயிலாக அதிவேக பயணங்களை நடத்தும் திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Leave a Comment