கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் விமான சேவைக்கு தடைவிதித்து வருகின்றன.விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. குறிப்பாக, துபாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் மையமாக திகழ்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதியில் இருந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விமான சேவையை ஐக்கிய அரபு அமீரகம் தடைசெய்திருந்தது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக அரசு தனது குடிமக்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்வதற்கு ஜூலை 21 வரை தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் லைபீரியா, நமீபியா, சியரா லியோன், காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, ஜாம்பியா, வியட்நாம், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா என மொத்தம் 14 நாடுகளுக்கு செல்வதற்கான தடை ஜூலை 21ம் திகதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சரக்கு விமானங்கள், அரசின் ஒப்புதல் பெற்று இயக்கப்படும் விமானங்கள் அந்நாடுகளுக்குச் செல்ல விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.