தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை ஜூலை மாதம் மீண்டும் திறக்க அரசு பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று அறிவித்தார்.
இலங்கை முழுவதும் 100 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இந்த மாதத்தில் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
100 இற்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகள், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3000 உள்ளதாக தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
மீதமுள்ள பாடசாலைகள் பல கட்டங்களின் கீழ் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என்று அவர் கூறினார்.
நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டு ஒன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. இருப்பினும், மொபைல் சிக்னல்கள் இல்லாததால் பல மாணவர்கள் ஒன்லைன் விரிவுரைகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.