தூத்துக்குடியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலுள்ளவர்களை நேரில் சென்று பார்த்த கனிமொழி, அவர்களிற்கு நிவாரணப் பொருட்களும் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, குளத்துள்வாய்பட்டி, மாப்பிளையூரணி ஆகிய 3 இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இதில், தாப்பாத்தியில் செயல்பட்டு வரும் இலங்கை அகதிகள் முகாமிற்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, நேரில் சென்றார். அங்குள்ள மக்கள் கைத்தட்டி, ஆரவாராம் எழுப்பி அவரை வரவேற்றனர்.
முகாமிலுள்ள பெண்கள், அவரவர் வீடுகளுக்கு அழைத்தனர். ஒவ்வொரு வீடாகச் சென்று பார்வையிட்டார். அப்போது, முகாமில் உள்ள மனநலம் பாதிக்கபட்ட முதியவர் ஒருவருக்கு, கனிமொழி 500 ரூபாய் வழங்கினார்.
அம்முகாமிலுள்ள 475 குடும்பத்திற்கு கொரோனா நிவாரணமாக தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறித் தொகுப்புகளை வழங்கினார். பின்னர், கழிப்பறை வசதிகள், தாழ்வாகச் செல்லும் மின் வயர்கள், கூடுதலாக குப்பைத் தொட்டிகள், தண்ணீர் தேக்கத் தொட்டிகள் அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை அம்மக்கள் முன் வைத்தனர்.
தாப்பத்தி இலங்கை அகதிகள் முகாமின் நிர்வாகக்குழு செயலாளர் அருள்ராஜ், “இந்த முகாம்ல அகதிகளா வாழ்ந்துக்கிட்டிருக்கோமே தவிர எங்களை இதுவரைக்கும் எந்த தலைவருமே வந்து சந்திச்சதில்ல. எங்களோட குறைகளைக் கேட்டதுமில்ல. எம்.பி.ங்கிற முறையில முதல் தடவையா கனிமொழி மேடம்தான், எங்களை வந்து சந்திச்சது மட்டுமில்லாம, அரிசி, காய்கறித் தொகுப்புகளைக் கொடுத்திருக்காங்க. இதை ரொம்ப பெருசா நினைக்கிறோம்.
தமிழ்நாட்டில் முகாமில் பதிவு செய்யாமல் வெளியில் வசிக்கும் 13,513 குடும்பத்திற்கும் அரசின் கொரோனா நிவாரணத்தொகை ரூ.4,000 வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவிச்சோம். காவல்நிலையங்களில் பதிவு செய்து ரேசன் அட்டை பெறாமல் இந்த முகாம்ல 15 குடும்பங்கள் இருக்குது. இவர்களைப் போல தமிழகம் முழுவதும் உள்ள முகாம்களில் தனிக்குடும்பமா வசிச்சுட்டு வர்ற குடும்பத்தினருக்கும் அரசு நிவாரணத்தொகை வழங்கிடணும்கிற கோரிக்கையையும் முன் வச்சோம். முகாம்களில் பலரும் டிப்ளமோ, டிகிரி முடிச்சிருக்காங்க.
தனியார் கம்பெனிகள்ல வேலைக்குப் போனாக்கூட ’அகதி’ன்னு தெரிஞ்சதும் வேலை இல்லை, வேற கம்பெனியை பாருங்கன்னு சொல்லிடுறாங்க. அதனால, தனியார் கம்பெனிகள்ல வேலைக்குச் சேருறதுக்காக உதவி செய்யுங்கன்னு மேடம்கிட்ட கோரிக்கை வச்சிருக்கோம். அதோட குடியுரிமை சம்மந்தமான கோரிக்கையையும் முன் வச்சிருக்கோம். எங்களோடக் கோரிக்கைகளை நிறைவேற்றுவாங்கனு நம்பிக்கையில இருக்கோம்“ என்றார்.




