விசேஷங்கள் நிறைந்த ஆனி மாதத்தில் வருகிற அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற்கொள்ளவும் ஏற்றதாக இருக்கிறது. மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் சுப காரியங்கள் விரும்பி செய்யப்படுகின்ற மாதமான ஆனி மாதத்தில் வருகின்ற இந்த ஆனி வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி வணங்கி வழிபடுபவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெறுவர்.
ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் மட்டும் சாப்பிட்டும் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் இன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் வீட்டின் பூஜையறையில் சிவபெருமான் படத்திற்கு பூஜை செய்து, நைவேத்தியம் படைத்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
வீட்டில் இறைவனை வழிபட்ட பின்பு, உங்களால் முடிந்தால் யாசகர்களுக்கு கீரை சாதம், பழச்சாறு போன்றவற்றை தானம் வழங்கலாம். இம்முறையில் ஆனி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு நீண்ட நாள் வியாதிகள் அனைத்தும் நீங்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் கணவனும் – மனைவியும் சேர்ந்து வாழும் சூழல் உருவாகும். கர்ம வினைகளும், பூர்வ ஜென்ம பாவ வினைகளும் நீங்கும்.