வீட்டில் மகன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்த தாயார் சிலமணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) பகல் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
புதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஞானப்பிரகாசம் மைக்கல், அவரின் தாயாரான 70 வயதுடைய ஞானப்பிகாசம் பாக்கியம் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஞானப்பிரகாசம் மைக்கல் புதூர் பிரதேசத்தில் திருமணம் முடித்து வாழந்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி ஏறாவூர் ஜயங்கேணியிலுள்ள அவரது தாயார் தனிமையில் வாழ்ந்து வரும் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவதினமான இன்று பகல் 11 மணியளவில் மகனை காணவில்லை என தாயார் தேடிய நிலையில் அறைக்கதவு பூட்டப்பட்டிருந்ததை அவதானித்தார். உறவினர்களின் உதவியுடன் அறைக்கதவை உடைத்து உட்சென்றபோது அங்கு கூரையில் கயிற்றில் தூக்கிட்டு மகன் உயிரை மாய்த்த நிலையில் காணப்பட்டார்.
இதனையடுத்து புற்றுநோயினால் பாதிக்கபட்டிருந்த அவரது தாயாருக்கு சில மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு, அவரும் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.





