ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு, கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிக்கப்பட்ட ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார, அனைத்து ஆவணங்களும் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார.
அனைத்து படிமுறைகளும் பூர்த்தியானதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் வெளியிடும்,
முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் எம்.பி.யாக பதவியேற்க உள்ளார்.
2020 நாடாளுமன்றத் தேர்தலில் 249,435 வாக்குகளைப் பெற்ற ஐ.தே.கவிற்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்தது. தேர்தலில் கட்சி சார்பில் யாரும் வெற்றியடையவில்லை.
கிட்டத்தட்ட 9 மாதங்களாக தேசியப்பட்டியல் நியமனத்தை வழங்க முடியாமல் இழுபறிப்பட்ட கட்சி, தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. அவரை பதவியேற்கும்படி கட்சி பல மாதங்களாக வற்புறுத்திய போதும், ரணில் இழுத்தடித்து வந்தார்.
இலங்கை சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியான ரணில் விக்கிரமசிங்க 1977 ஆம் ஆண்டில் பியகம தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலில் பாராளுமன்றத்தில் நுழைந்தார்.
தனது 28 வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு, தொடர்ந்து 44 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து வருகிறார். இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் இவ்வளவு நீண்டகாலம் வேறு யாரும் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்புரிமையை கொண்டிருந்ததில்லை.
2015 நாடாளுமன்றத் தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 500,566 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.
தனது 44வயது வயதில், 1993ஆம் ஆண்டு பிரதமர் பெறுப்பை ஏற்றார். 4 தடவைகள் பிரதமராக செயற்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டதை பல எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன, அவர் தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை நிவர்த்தி செய்வதிலும் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் வாரங்களில் பல நாடாளுமன்றக் குழுக்களில் அவர் பெயரிட திட்டமிடப்பட்டுள்ளது.