புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் உடைத்து களவாடப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் முறைப்பாட்டினை பதிவு செய்ய மறுத்ததாக ஆலய நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார்.
மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் பிள்ளையார் இல்லாத காரணத்தினால் பிள்ளையார் சிலை ஒன்றை நிறுவியுள்ளனர். இந்நிலையில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு பூசைகள் இடம்பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து கடந்த 03-06-2021 அன்று ஆலய குருவை நித்திய பூசை செய்ய வேண்டாம் எனவும் ஆலயத்தை தொடர்ந்து பராமரித்து வரும் அயலவர்களை கோவில் பக்கம் செல்ல வேண்டாம் என்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரித்த நிலையில் அன்று இரவே பிள்ளையார் சிலை உடைத்து களவாடி செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்தபோது பொலிசார் முறைப்பாடு செய்யாது திருப்பி அனுப்பியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிலையில் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பொலிசார் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் முறைப்பாடு செய்ததற்கான எந்த ஆவணங்களையும் பொலிசார் வழங்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ மதப்பிரிவினர் தம்முடன் முரண்பட்டு வருவதாக, ஆலய நிர்வாகம் சில காலமாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.