சிரிய அரசின் சித்திரவதைகளிற்கு பங்களித்ததற்காக சிரியாவை சேர்ந்த ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
44 வயதான ஐயாத் அல்-கரிப், புதன்கிழமை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு துணையாக செயல்பட்ட குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி அரபு வசந்தம் சிரியாவை அடைந்து ஏற்பட்ட பெரும் இரத்தக்களரிக்கு, ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, சிரிய அரச பயங்கரவாதம் தொடர்பான தீர்ப்பு உலகில் முக்கியம் பெற்றுள்ளது.
உளவுத்துறையின் கீழ்நிலை உறுப்பினராக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக கரிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் தலைநகரின் வடகிழக்கில் டுமாவில் நடந்த பேரணியின் பின்னர் குறைந்தது 30 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டு டமாஸ்கஸில் உள்ள அல்-காதிப் தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கோப்லென்ஸில் உள்ள நீதிமன்றத்தால் 2020 ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பிரதிவாதிகளில் கரிப் முதலாவது நபர்.
இரண்டாவது பிரதிவாதி, 58 வயதான அன்வர் ரஸ்லான், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டார், 58 பேர் கொல்லப்பட்டதையும், 4,000 பேரை சித்திரவதை செய்ததையும் மேற்பார்வையிட்டார்.
ரஸ்லானின் விசாரணை குறைந்தபட்சம் ஒக்டோபர் இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதகுலத்திற்கு எதிரான போர், இனப்படுகொலை உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்க அனுமதிக்கும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், இவர்கள் மீதான விசாரணையை ஜேர்மன் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளிலும் இந்த வகையான பிற வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்த சிரியர்கள் சர்வதேச நீதி அமைப்பில் முடக்கம் காரணமாக தங்களுக்கு தற்போது கிடைத்துள்ள ஒரே சட்ட வழிமுறையான- அந்தந்த நாடுகளின் சட்ட உதவியை பெற ஆரம்பித்துள்ளனர்.
துருக்கியிலும் பின்னர் கிரேக்கத்திலும் தங்கியிருந்த பிறகு, கரிப் ஏப்ரல் 25, 2018 அன்று ஜெர்மனிக்கு வந்தார்.
அவர் தனது கடந்த காலத்தை ஒருபோதும் மறுக்கவில்லை. அவரது புகலிடம் விண்ணப்பத்திற்கு பொறுப்பான ஜேர்மனிய அதிகாரிகளிடம் அவர் தனது கதையை கூறினார். இதனால் பெப்ரவரி 2019 இல் கைது செய்யப்பட்டார்.
“கிட்டத்தட்ட தொழில்துறை அளவில்” சித்திரவதை செய்யப்படும் ஒரு அமைப்பின் இயந்திரத்தில் அவர் ஒரு அங்கம்“ என சட்டத்தரணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
10 மாத விசாரணைகளின் போது முக்கியமாக ரஸ்லான் மீது கவனம் செலுத்தியதால், கரிப் அமைதியாக இருந்து கமராக்களிலிருந்து முகத்தை மறைத்துக் கொண்டார். அவர் எழுதிய கடிதமொன்றை சட்டத்தரணி படித்தார். அதில் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது துக்கத்தை வெளிப்படுத்தினார். கடிதம் படிக்கப்பட்ட போது, அவரது கண்ணீர் விட்டு அழுதார்.
அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவரது சட்டத்தரணி கேட்டுக் கொண்டார். அவர் அரசின் உத்தரவுகளை நிறைவேற்றாவிட்டால் அவரும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வாதிட்டார்.
ஜனாதிபதி அசாத்தின் உறவினரும் நெருங்கிய கூட்டாளியுமான ஹபீஸ் மக்லூஃப்பின் மிருகத்தனத்திற்கு அவர் பயந்ததாக கூறினார்.
ஆனால் பிரதிவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி பட்ரிக் க்ரோக்கர், விசாரணைகள் முழுவதும் மௌனமாக இருப்பதை சுட்டிக்காட்டி, சிரிய அதிகாரிகள் பற்றிய தகவலை மறைப்பதாக குற்றம்சாட்டினார்.
விசாரணையின் போது, ஒரு டசின் சிரிய ஆண்களும் பெண்களும் அல்-காதிப் தடுப்பு மையத்தில் “கிளை 251” என்று பெயரிடப்பட்ட இடத்தின் பயங்கரமான துஷ்பிரயோகங்களைப் பற்றி சாட்சியமளித்தனர்.
சிறைச்சாலையில் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம், மின்சார அதிர்ச்சிகள், கைமுட்டிகளை கம்பிகள் மற்றும் சவுக்குகளால் தாக்குவது மற்றும் தூக்கமின்மை போன்ற சித்திரவதைகளை வெளிப்படுத்தினர்.
சிலர் அடையாளங்களை மறைத்து சாட்சியமளித்தனர். இப்போதும், சிரியாவில் உள்ள தங்கள் உறவினர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்ற பயத்தில் முகங்களை மறைத்து அல்லது விக் அணிந்திருந்தார்கள்.