மெக்சிகோ நாட்டில் வேளாண் விளை நிலத்தில் பூமி உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
மெக்சிகோ நாட்டின் பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள விளை நிலத்தில் திடீரென பூமி உள்வாங்கியதில் பெரிய பள்ளம் தோன்றியது. வின்கலம் விழுந்தால் எப்படி பெரிய பள்ளம் ஏற்படுமோ அதுபோன்று அந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பள்ளம் விழுவதற்கு முன் பயங்கர சப்தம் கேட்டதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். சுமார் 300 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்ட இந்த பள்ளம் எந்த நேரத்திலும் பெரிதாகலாம் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பள்ளம் சற்று பெரிதானாலும் அருகில் இருக்கும் வீட்டை உள்வாங்கிக் கொள்ளும். எனவே, அந்த வீட்டில் வசிப்பவர்கள் அங்கிருந்து தற்காலிகமாக காலி செய்துள்ளனர்.
முதலில் பயம் காரணமாக அந்த இடத்தை விட்டு வெளியேறிய அப்பகுதி மக்கள் தற்போது பயம் விலகியதும், நீர் நிரம்பி மிகப்பெரிய கிணறு போன்று காட்சியளிக்கும் அப்பள்ளத்தை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
சிங்க்ஹோல் என்று அழைக்கப்படும் இத்தகைய பள்ளங்கள் பூமியின் மேற்பாறைகளை நீரோட்டம் கரைப்பதால் ஏற்படுகிறது. இப்பகுதியில் பூமிக்குக் கீழ் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பதால் அவை கரைந்து இதுபோன்று பள்ளம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.