‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதனிடையே, பேட்ட பட ரஜினியின் கெட்டப் போன்று ஜகமே தந்திரம் படத்தில் தனுஷின் கெட்டப்பும் அமைந்துள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கும் தொடர்பு இருக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், இது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “பேட்ட படத்தில் பேட்ட வேலனாக நடித்திருந்த ரஜினியின் மகனாக ஜகமே தந்திரம் படத்தில் தனுஷின் சுருளி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதா அல்லது பேட்ட ரஜினியின் இளம் வயது கதையாக ஜகமே தந்திரம் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதா என்று என்னிடம் பலர் கேட்டனர்.
அவர்களுக்கு நான் சொன்ன பதில் ‘இல்லை’ என்பது தான். பேட்ட படத்திற்கும் ஜகமே தந்திரம் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது வேறு கதை” என தெரிவித்துள்ளார்.