கருப்பு பூஞ்சை பாதிப்பால் இரண்டு சிறுவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்களுக்கு மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று ஆங்காங்கே பரவி வருகிறது. பெரும்பாலும் இளைஞர்கள், முதியவர்களுக்கு மட்டுமே பரவி வந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு, முதல்முறை சிறுவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கும், பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனுக்கும் பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறுவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் அரசு பவுரிங் மருத்துவமனையிலும், மற்றொருவர் லேடி கர்சன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் Acute Juvenile Diabetes என்ற பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. ஆனால் இதனை சிறுவர்களோ, அவர்களது பெற்றோர்களோ உணரவில்லை. இந்த சூழலில் பாதிப்புகள் தீவிரமடையவே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் கருப்பு பூஞ்சை தொற்றும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் மட்டும் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1,193 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் குணமடைந்துவிட்டனர். 39 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை அளித்த தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.