யுவன் செய்யும் வெகுளித்தனமான தவறுகள், வேடிக்கையான விஷயம் குறித்து அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷா பகிர்ந்துள்ளார்.
முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
யுவனின் மனைவி பெரிதாக எந்தவொரு திரையுலக நிகழ்ச்சிக்கும் வருவதில்லை. ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். யுவன் குறித்து பெரிதாகப் பேட்டியும் அளித்ததில்லை.
இந்நிலையில், முதன் முறையாக யுவன் குறித்து பேட்டியொன்றை அளித்துள்ளார். 12 கேள்விகள் கொண்ட அந்தப் பேட்டி ‘U1 Records’ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் யுவன் மனைவியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும்:
சமீபத்தில் யுவனிடமிருந்து நீங்கள் கற்ற மதிப்புமிக்க விஷயம் என்ன?
காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது என்பதுதான். நாங்கள் சந்தித்த காலத்திலிருந்து, திருமணமான காலத்திலிருந்து இன்று வரை அவரிடம் அப்படியே இருப்பது, எப்போதுமே அமைதியாக, கவனமாக இருப்பார். திடீரென எதற்கும் எதிர்வினையாற்ற மாட்டார், எளிதில் எரிச்சலாக மாட்டார். பிரச்சினையின்போது, அழுத்தமான சூழலின்போது பொறுமையாகவே இருப்பார்.
அந்த விஷயங்கள் தன்னை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வார். என்றுமே நேர்மறையாக இருப்பார். ஒருவரால் எப்படி இதுபோல இருக்க முடியும் என்று முதலில் நான் ஆச்சரியப்பட்டேன். அவரோடு அதிக நேரம் செலவிடுவதால் இப்போது நான் அந்த குணத்தைக் கற்க முயல்கிறேன். சில விஷயங்களுக்கு நாம் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் இருப்பது நல்லது என்பதைப் புரிந்துகொண்டு வருகிறேன்.
யுவனின் எந்தப் பாடல் உங்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது?
’பேரன்பு’ திரைப்படத்தில் ’’செத்துப் போச்சு மனசு’’ என்கிற பாடல் இருக்கிறது. பாடல் ஆரம்பமாகும்போது சோகமாக இருக்கும். அது உங்களை ஒரு பயணத்துக்கு இட்டுச் சென்று, நேர்மறையாக முடியும். முடிவில் அது நம்பிக்கையை மீட்டுத் தரும்.
’புதுப்பேட்டை’ படத்தில் மிகப் பிரபலமான ’’ஒரு நாளில் வாழ்க்கை’’ பாடலும் எனக்குப் பிடிக்கும். அடிக்கடி கேட்பேன். தற்போது ’மாமனிதன்’ திரைப்படத்தில் ’’ஏ ராசா’’ என்கிற பாடல் இருக்கிறது. அது உத்வேகத்தை அளிக்கும் பாடல். வாழ்க்கையைக் கொண்டாடும் பாடல் அது. அடுத்த ஒரு நாளில் வாழ்க்கைப் பாடலாக அது இருக்கலாம். பாடலுக்குக் கிடைக்கப் போகும் வரவேற்பை நான் எதிர்நோக்கியிருக்கிறேன்.
யுவன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு சின்ன ரகசியம் என்ன?
அவரது யு1 ரெக்கார்ட்ஸ் இசை நிறுவனத்தின் மூலமாக பல சுயாதீனக் கலைஞர்கள், திறமையாளர்களோடு சேர்ந்து பணியாற்ற அவர் திட்டமிட்டு வருகிறார். அந்நிறுவனத்தை ஆரம்பிக்க இது ஒரு முக்கியக் காரணம். மேலும் யு1 ரெக்கார்ட்ஸில் அவருடைய ரசிகர்களும், திறமையாளர்களும் அவரோடு இணைந்திருக்கும் வகையில் ஒரு தளத்தை உருவாக்க முயல்கிறோம். இன்னும் பல விஷயங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
யுவன் செய்யும் வெகுளித்தனமான தவறுகள் என்ன?
அவருக்குள் ஒரு இனிமையான குழந்தைத் தனம் இருக்கிறது. அது பலருக்குத் தெரியாது. அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கும் விஷயம் அது. அவர் ஒருவரோடு நெருக்கமாகி விட்டால், அது நண்பர்களோ, குடும்பத்தினரோ, அவர்களைக் கிண்டல் செய்வார், விளையாட்டாக அடிப்பார், மிரட்டுவார். சில நேரங்களில் உள்நோக்கம் எதுவுமின்றி அதில் எல்லை மீறிவிடுவார். அதுதான் அவர் செய்யும் வெகுளித்தனமான தவறு.
யுவன் செய்து நீங்கள் பார்த்த வேடிக்கையான விஷயம் என்ன?
நிறைய உள்ளன. ஒன்றைச் சொல்வது கடினம். ஊரடங்கின்போது நாங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கினோம். அவர் ட்ரிம்மரை வைத்து சிகையைச் சரிசெய்து கொண்டிருந்தார். திடீரென என் பெயரைச் சொல்லி அலறினார். நான் என்ன ஆனதென்று பதறி அவரிடம் ஓடினேன். அவரைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. கை தவறி அவரது தலைமுடியின் ஒரு பக்கத்தை மொத்தமாக எடுத்து விட்டிருந்தார். அப்படியே ஒரு பக்கம் காணாமல் போய்விட்டது. அது மிகவும் நகைச்சுவையான தருணமாக இருந்தது. அதன்பின் அவரது மொத்த முடியையும் அதே அளவுக்குக் குறைத்தோம். கிட்டத்தட்ட மொட்டையடித்தது போல ஆகிவிட்டார். 2-3 வாரங்களுக்கு அதே தோற்றத்தில் இருந்தார்.