முன்னதாக வாட்ஸ்அப் பல புதிய தனியுரிமை கொள்கைகள் கொண்டு வந்தது நமக்கு தெரிந்த ஒன்றுதான். இதனால் வாட்ஸ்அப் சில பின்னடைவுகளைச் சந்தித்தது. அதோடு பயனர்களின் தனியுரிமையே எங்களின் முக்கியத்துவம் என்றும் தெரிவித்து பயனர்களின் கணக்குகளை நீக்காது என்றும் கட்டுப்பாடுகளும் எதுவும் விதிக்கப்படாது என்றும் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அந்த பிரச்சினை ஒரு முடிவை எட்டிய நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அரசு பல புதிய தொழில்நுட்ப விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதில் இப்போது புதிதாக சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.
தனியுரிமை பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசுடன் நடந்த மற்றொரு மோதலில், வாட்ஸ்அப் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் அதற்கு எதிராக வாட்ஸ்அப் புகார் அளித்துள்ளது. இந்த புதிய விதிகள் வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கைக்கு எதிரானவை என்றும், இது செய்திகளின் அனுப்புநர் மற்றும் பெறுநருக்கு இடையே end to end encrytion என்று சொல்லக்கூடிய பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
இன்று நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, first originator of information அதாவது தகவல்களைத் தோற்றுவிப்பவரின் அடையாளத்தை அதிகாரிகள் கேட்கும்போது வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த விதி இந்தியாவின் அரசியலமைப்பில் பயனர்களின் தனியுரிமை உரிமைகளை நேரடியாக மீறும் ஒன்றாகும்.
ஏனென்றால், தவறு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே இது செய்யப்படுகின்ற போதிலும், பெறுநர்களுக்கும், செய்தி உருவாக்குனர்களுக்கும் இடையிலான இறுதி முதல் இறுதி குறியாக்க பாதுகாப்பை உடைக்க வேண்டும் என்றும் வாட்ஸ்அப் தளத்திடம் கேட்கப்படுவதால் இப்போது சிக்கல் எழுந்துள்ளது.
வாட்ஸ்அப் தனது பயனர்களின் தனியுரிமைகளை விட்டுத்தர முடியாது என்று வாதிடுவதால் இப்போது இந்த சிக்கல் பெரிதாகியுள்ளது. இதற்கிடையில், இன்னும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற ஊடக நிறுவனங்களும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கொள்கைகளுக்கு இணைங்கவில்லை என்பதால் அவை தடைச் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான பதில் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.