பெங்களூருக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் கொரோனாவை மறந்து கிராம மக்கள் திருவிழாவில் ஈடுபட்டதால் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிலை கதக் மாவட்டம் நற்குண்ட் அருகே உள்ளது பனஹட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் ஒரு ஆஞ்சநேயர் சிலையை நிறுவ, ஒருவிழாவே எடுத்து, அந்த பகுதி மக்கள் சிறப்பாக கொண்டாடினர். எல்லாருமே வீதிகளில் திரண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணியாமல், ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை ஊற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவிழா என்பதால், யாரும் காலில் செருப்பு இன்றியே கிராமம் முழுவதும் நடமாடி கொண்டிருந்தனர்.. ஒருவரையொருவர் முண்டியத்து கொண்டு, தண்ணீர் பானைகளை தலையில் வைத்து, ஆட்களின் மீது இறைத்து கொண்டிருந்தனர். இதைதவிர, ஊர் எல்லையில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளையும் நடத்தினர். லாக்டவுன் அமலில் இருக்கிறதே என்ற நினைப்பு கொஞ்சமும் இல்லாமல், ஒரே இடத்தில் எல்லாருமே திரண்டனர்.
வீடுகளிலேயே முடங்கி இருந்த மக்கள், கோயில் திருவிழா என்றதும், இப்படி திரண்டதால், தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், விதிகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்த கிராமத்தையும் தனிமைப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.