நாட்டில் அதிகரித்து வரும் COVID-19 தொற்று கொண்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்கள் வீட்டிலேயே தனிமையிலிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைகளும் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சமயத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் அதை கண்டறிய பயன்படுத்தப்படும் பல்ஸ் ஆக்சிமீட்டருக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் ஒரு நோயாளியின் இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்கும். ஆக்சிஜன் அளவு பாதுகாப்பான அளவை விடக் குறைந்துவிட்டால் சுகாதாரப் பணியாளரிடம் தெரிவிக்கவும் வீட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஆக்சிஜன் அளவைக் கண்காணித்து குறைந்தால் மருத்துவ உதவி பெறவும் இது உதவியாக இருக்கும்.
நோயாளியின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவின் சதவீதத்தை SpO2 ஆக்சிமீட்டர்கள் காட்டுகின்றன. ரத்தத்தில் இருக்க வேண்டிய ஆக்ஸிஜனின் சாதாரண அளவு பொதுவாக 95% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.
நுரையீரல் நோய் அல்லது மூச்சுத்திணறல் உள்ள சிலருக்கு சாதாரண அளவு 90% ஆக இருக்கும். இருப்பினும், உங்கள் SpO2 அளவு 90% ஐ விடக் குறைவாக இருந்தால், உடனடியாக உங்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநரை சந்தித்து மருத்துவ உதவி பெறுவது நல்லது.
பல்ஸ் ஆக்சிமீட்டரை சரியாகப் பயன்படுத்துவது எப்படி? (படிப்படியான செயல்முறை)
- உங்கள் விரலில் நெயில்பாலிஷ் அல்லது மருதாணி போன்ற எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- உங்கள் கைகள் சாதாரண வெப்பநிலையில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், அவை குளிர்ச்சியாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் ரீடிங் மாறக்கூடும்.
- பல்ஸ் ஆக்சிமீட்டரைப் போடுவதற்கு முன்பு குறைந்தது ஒரு 10 நிமிடம் உட்கார்ந்து ஓய்வெடுக்கவும்.
- பல்ஸ் ஆக்சிமீட்டரை உங்கள் ஆள்காட்டி அல்லது நடு விரலில் போட்டுக்கொள்ளுங்கள்.
உங்கள் கையை உங்கள் மார்பின் மீது உங்கள் இதயத்திற்கு அருகில் வைத்து கையை அசைக்காமல் இருக்கவும். - ரீடிங் சரியாக காண்பிக்கப்படும் வரை பல்ஸ் ஆக்சிமீட்டரை உங்கள் விரலில் குறைந்தது ஒரு நிமிடம் வரையாவது வைத்திருங்கள்.
- அதன் பிறகு ஆக்ஸிமீட்டரில் காண்பித்த அதிகபட்ச ரீடிங்கை பதிவுசெய்க.
- விரல் நன்றாக ஆக்சிமீட்டாரில் பொருந்தி இருக்கிறதா மற்றும் ப்ரோப் மிகவும் இறுக்கமாக இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
- உங்கள் உடல்நிலை அல்லது ஆக்ஸிஜன் அளவை மதிப்பிடுவதற்கு ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டரை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம். ஆக்சிஜன் அளவு சரியாக இருந்து போதிலும் வேறேதேனும் பிரச்சினைகள் இருப்பதாக தெரிந்தால் அருகிலுள்ள மருத்துவரைச் சந்தித்து உடனடியாக மருத்துவ உதவி பெறுவது நல்லது..