26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
உலகம்

சிங்கப்பூரின் பிரபல ஆலயத்தில் தங்க நகைகளை அடைவு வைத்த ஐயர் சிக்கினார்!

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் முன்னாள் தலைமை குருக்கள் சிவஸ்ரீ கந்தசாமி சேனாபதி மீது நம்பிக்கை மோசடி உட்பட பத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு பதிவாகியுள்ளது. இது சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைமை குருக்களின் பொறுப்பில் இருந்த தங்க நகைகள் காணாமல் போய், மீண்டும் ஒப்படைக்கப்பட்டது தொடர்பாக கோயில் நிர்வாகம் காவல்துறையில் புகார் அளிக்க, அதன் பேரில் சிவஸ்ரீ கந்தசாமி சேனாபதி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சைனா டவுனில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் முக்கியமான ஒன்றாகும். இது கடந்த 1827ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதித் திருவிழா இக்கோயில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில்தான் நடைபெறுகிறது. சிங்கப்பூர் மட்டுமல்லாமல் வெளிநாட்டு தமிழர்கள் மத்தியிலும் பிரசித்தி பெற்ற கோயிலாக இது விளங்குகிறது.

இக்கோயிலின் தலைமை குருக்களாக தமிழகத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ கந்தசாமி சேனாபதி இருந்து வந்தார். கோயிலுக்குச் சொந்தமான தங்க நகைகள் அன்றாட, சிறப்பு வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படுவது வழக்கம். அந்த நகைகளுக்கு தலைமை குருக்கள் என்ற வகையில் சிவஸ்ரீ கந்தசாமி சேனாபதி பொறுப்பேற்றிருந்தார்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் நகைகள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா என்பதை கோயில் நிர்வாகம் உறுதிப்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் கடைசியாக நகைகளை சரிபார்த்த போது அவற்றில் சில மாயமாகி இருந்ததாகத் தெரிகிறது. இது குறித்து தலைமை குருக்களிடம் கோயில் நிர்வாகம் விசாரித்ததாகவும் அதை அடுத்து அனைத்து நகைகளையும் அவர் நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாகவும் சிங்கப்பூர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் பின்னர் நகைகளை சோதித்துப் பார்த்தபோது அவை அனைத்தும் சரியாக இருந்ததாகவும் வேறு யாருக்கும் நகைகள் மாயமானதில் தொடர்பில்லை என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமைக் குருக்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

“ஒரு குற்றச்செயல் நடைபெற்று இருப்பது தெரிய வந்ததை அடுத்து, கோயிலுக்கு இழப்பு எதுவும் இல்லை என்றாலும், இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது,” என்று கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் நாளேட்டின் செய்தி தெரிவிக்கிறது.

அந்த தலைமைக் குருக்கள் மீது நம்பிக்கை மோசடி உட்பட பத்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அவர் இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் தங்க நகைகளைக் கையாடியது நம்பிக்கை மோசடி என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

37 வயதான கந்தசாமி சேனாபதி கையாடல் செய்ததாக கூறப்படும் நகைகளின் மதிப்பு சுமார் $2 மில்லியனுக்கும் மேல் என்றும், இதன் மூலம் திரட்டிய பணத்தில் சுமார் $140,000க்கு மேலான தொகையை அவர் தனக்காக பயன்படுத்தியுள்ளார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில வங்கிகள் மூலம் அவர் ஒரு பகுதி தொகையை இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது என்று சிங்கப்பூர் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இதற்கிடையே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கந்தசாமி சேனாபதி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இத்தகவலை இந்து அறக்கட்டளை வாரியம் உறுதி செய்துள்ளது.

எனினும் வழக்கு விசாரணைக்காக அவர் சிறப்பு அனுமதியின் பெயரில் சிங்கப்பூரில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் $100,000 தொகையிலான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணை மார்ச் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கந்தசாமி சேனாபதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஐந்து லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் அபராதமாக விதிக்கப்படவும் அந்நாட்டுச் சட்டத்தில் இடமுண்டு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சட்டம் அமல் எதிரொலி: தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

Pagetamil

பல இலட்சம் கோடி சொத்தை உதறிவிட்டு பௌத்த பிக்குவான இலங்கைத் தமிழரின் மகன்!

Pagetamil

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி

Pagetamil

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்: பின்னணியும் தாக்கமும் என்ன?

Pagetamil

உக்ரைன் போரை நிறுத்த சிறப்பு தூதரை நியமித்த ட்ரம்ப்

Pagetamil

Leave a Comment