திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். இருப்பினும் திருமணம் செய்து கொள்பவர்கள் வாழக்கூடிய வாழ்க்கையும், விட்டுக் கொடுத்து செல்வதைப் பொறுத்து தான் அவர்களின் வாழ்க்கை சொர்க்கமா, நரகமா என்பது அமைகிறது.
திருமணம் என்ற பேச்சு எடுத்ததும், திருமண செய்ய உள்ள ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தை, வரனாக வந்திருக்கும் நபரின் ஜாதகத்தைப் பொருத்திப் பார்ப்பது வழக்கம்.
இந்த திருமணப் பொருத்தத்தின் போது ஜாதகரின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மட்டும் வைத்து பொருத்தம் கணக்கிடப்படுகிறது.
9, 10 பொருத்தங்கள் உள்ளது என்றால், அருமை மிகவும் நன்றாக பொரிந்திருக்கிறது என்று திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அதிக பொருத்தங்கள் இருந்தாலும், அவர்களுக்குள் வாழ்வில் சேர்ந்து வாழமுடியாத, கசப்பான அனுபவத்தை சிலர் பெறுவதுண்டு. அதனால் சிலர் பிரியும் சூழல் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் ஜோதிடம் எல்லாம் பொய் என ஜோதிடத்தின் மீதும், ஜோதிடர்கள் மீதும் பழி போடுவதைப் பார்த்திருப்போம்.
உண்மையில் ஒரு திருமணத்திற்கான ஜோடி வாழ்வில் சேர 10 பொருத்தங்களை மட்டும் பார்த்தால் போதுமா?, பத்து பொருத்தங்கள் இருந்தும் சிலரின் வாழ்க்கை சரியாக அமையாமல் போக காரணம் என்ன என்பதை கேள்விக்குறியாக இருக்கிறதல்லவா?
10 பொருத்தம் இருந்தும், இருவரில் ஒருவருக்கு சந்திரன் வலுவில்லாமல் அல்லது வலுவிழந்தும், சுபத்துவம் இல்லாமல் அமைந்திருந்தால் அவர்களுக்கு திருமண வாழ்வில் கசப்பு ஏற்படத்தான் செய்யும்.
சுபத்துவம் இல்லாத சந்திரன் உள்ளவர்களின் ஜாதகத்தை வைத்து 10 பொருத்தங்கள் பார்த்தால் எப்படி சுப பலன் அமையும்.
பொதுவாகவே திருமண பொருத்தம் பார்ப்பவர்கள் ராசி, நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்க்காமல், ஜாதகத்தின் உள் பொருத்தம் பார்ப்பதும் அவசியம். அப்படி ராசி, நட்சத்திர, ஜாதக உள் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தால் தான் திருமண வாழ்வு சிறக்கும்.