பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னையும் கைது செய்யுமாறு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்
நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடியை கண்டித்து தலைநகர் டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், ‘மோடிஜி, எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசியை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தீர்கள்?’ என அச்சிடப்பட்டு இருந்தது.
டெல்லியின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த இந்த கறுப்பு நிற போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக டெல்லியில் பல காவல்நிலையங்களில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், இதுவரை 17 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் கூலிக்கு போஸ்டர் ஒட்டியவர்கள் என்று தெரிய வந்துள்ளதால், இதன் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், பிரதமருக்கு எதிரான கருத்து தெரிவித்தால் கைது செய்யப்படுவார்களா என்ற விமர்சனக் கேள்விகளையும் பலர் முன் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த போஸ்டரில் இருக்கும் அதே வாசகத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தைரியம் இருந்தால் என்னையும் கைது செய்யுங்கள் என்று பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.