முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை உடைத்து யுத்தத்தால் இறந்தவர்களை
நினைவுகூற மறுப்பது சர்வதேச ஒப்பந்தங்களை மீறும் செயல் என பச்சிளைப்பள்ளி
தவிசாளர் சுப்ரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமை தொடர்பாக இன்றைய (16) தினம் கிளிநொச்சி ஊடக அமையத்தில் ஊடகசந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்து இருந்தார். அதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அண்மையில் இடித்து அழிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்து அழிக்கப்பட்ட செயலானது பௌத்த
மேலாதிக்க சிந்தனைகளில் இருந்தும் பெளத்த இதிகாச சிந்தனைகளில் இருந்தும் இலங்கை அரசும் இலங்கை அரசின் ஆட்சியாளர்களும் இன்னும் மீண்டு வர
தயாரில்லை என்பதையும் இதுவரை காலமும் அவர்கள் அந்த சிந்தனைகள் விட்டு வெளியே வரவில்லை என்பதையும் குறிக்கின்றது.
இந்த நினைவு தூபி உடைப்பு என்பது அனைவராலும் உற்று நோக்க கூடிய ஒரு விடயமாக காணப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர், ஒரு இனத்தின் மீது மேற் கொள்ளப்பட்ட இன அழிப்பின் பின்னர் அந்த இனத்தை எவ்வாறு ஆற்றுப்படுத்த வேண்டும் என்கின்ற செயற்பாடுகளை மறந்து சிறுபான்மை இனத்தை நாட்டின் பற்றுள்ளவராக எவ்வாறு மாற்ற வேண்டும் என்ற தேடுதல்களை விடுத்து இந்த ஆட்சியாளர்கள் சிங்கள தேசிய நோக்கங்களை கொண்டு நினைவுத்தூபியை உடைக்கும் செயற்பாடே இதுவாகும்.
அண்மையில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களில் இலங்கையில் கடந்த காலத்தில் இருந்த அரசு இலங்கையிலே அவர்களுக்கு நிலைமாறு நீதியை மையப்படுத்தி அளிக்கப்பட்ட நீதியாக அவர்களிற்குரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதே நேரம் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பது தொடர்பான சம பாயத்திலே கையொப்பம் இட்டு அதனை ஏற்றுக்கொண்டு கடந்த அரசு பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்து இருந்தது. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்து இருக்கின்ற அரசு அந்த விடயங்களை எல்லாம் மறந்தும் மறுத்தும் எங்கள் இனத்தின் மீதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்களுடைய தரப்பு மீதும் மீண்டும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொண்டு வருகின்றது.
இந்த யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளை நினைவு கூற மறுக்கின்ற இந்த செயல் ஆனது சர்வதேச ஒப்பந்தங்களை மீறும் செயலாகவே காணப்படுகின்றது.
இவ்வாறான அடக்கு முறைகளை இந்த அரசு மிக விரைவாக நிறுத்தி இந்த நாட்டிலே எவ்வாறு தமிழர் சிங்களவர் முஸ்லிம் ஏனைய இனங்கள் ஒற்றுமையோடு வாழ்ந்து எதிர்காலத்தில் ஓர் சுபிீட்சமான நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என குறிப்பிட்டார்.




