இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் நாடு பூராகவும் போராட்டங்களையும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஒன்றினைந்த சுகாதார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்னாள் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) ஒன்றினைந்த சுகாதார ஊழியர் சங்கம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிட்டு விநியோகித்தது.
ஐந்து நாள் வேலை வாரத்தின் மேலதிக 8 மணித்தியால பணிக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்ளல். சுகாதார ஊழியர்களின் வெற்றிடத்தை உடனடியாக நிரப்புதல், சுகாதார உதவியாளர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு வீதத்தை 1ஃ160 முறையாக உறுதிப்படுத்தல். முறையான கட்டமைப்பு பட்டியல் மற்றும் நியாயமான ஆளணி சேர்க்கை நடைமுறையை வகுத்தல்,
இலவச சுகாதார சேவைக்காக வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்சம் 5 வீத நிதியை ஒதுக்குதல், மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபை மருத்துவமனைகளின் பதில் கடமை நியமனங்களை நிரந்தரப்படுத்துதல், உணவு சுகாதாரம் அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் விடுதி வசதிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்,
மாகாணசபை மருத்துவமனைகளில் அரச பொது விடுமுறை நாட்களில் பணியாற்றினாலும் கொடுப்பனவுகள் வழங்கப்படாமை மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு மறுக்கப்படும் பிரச்சனைகளை தீர்த்தல் போன்ற 8 கோரிக்கைகள் முன்வைத்துள்ளது.
இந்த அரசாங்கம் எதிர்வரும் 11ம் திகதி தனது மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் ஜந்து நாள் வேலை வராக் கோரிக்கை, மேலதிக நேரக் கொடுப்பனவு வீதங்கள் மற்றும் அரச சேவை வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட எமது நியாயமான தொழில்சார் கோரிக்கைகளை ஆட்சிப் பெறுப்பை ஏற்றதும் உடனடியாக நிறைவேற்றுவதாக இவர்கள் வாக்களித்திருந்தமை உங்களுக்கு நினைவு இருக்கிறதா?
எனினும் கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் மூலமாக எமது கோரிக்கைகள் அனைத்தும் முற்றாக குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன இம்முறையும் எமக்கான உரிமைகளை வழங்காமல் ஏமாற்றுவதற்காகவே அரசு ஆயத்தமாகி வருகிறது.
கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் நாம் போராட்டங்களை முன்னெடுத்த சந்தர்ப்பங்களில் அந்த வரவு செலவு திட்டத்தில் உரிய தீர்வுகளை தருவதாக கூறி போராட்டங்களை கைவிடுமாறு அரசாங்க பிரதிநிதிகள் கோரினார். ஆனால் இறுதியாக என்ன நடந்தது? எமது முதன்மையான கோரிக்கைகளில் ஒன்று கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
எமது சீருடை உட்பட அனைத்து உரிமைகளையும் நாம் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாகவே வென்றெடுத்தோம் வீரியமிக்க போராட்டங்களின்றி எமக்கான எந்தவொரு நியாயமான உரிமையும் தானாக கிடைத்துவிடப்போவதில்லை ஆகவே தான் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்க படுவதற்கு முதல்நாளான 10 ம் திகதி போராட்டங்களையும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவும் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் இதன் இரண்டாவது வாசிப்புக்கு முன்னதாக எமது நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவோம் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வருகை தந்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்த போதிலும் நடைமுறையில் எதுவும் இடம்பெறவில்லை
எனவே எமது நியாயமான கோரிக்கைகளுக்காக நாம் குரலெழுப்பினால் மட்டுமே எமக்கான உரிமையை வென்றெடுக்க முடியும் இதற்கமைய எமது தொழில்சார் நடவடிக்கையை முழுமையாக வெற்றியடைய செய்ய அனைவரும் நவம்பர் 10 ம் திகதி உறுதியுடன் ஒன்றிணைவோம். என அந்த துண்டு பிரசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது




