யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை எதிர்வரும் வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் இன்றைய தினம் (8) மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான காணியை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
சுற்று சூழல் சார்ந்த சில அறிக்கைகளை பெற வேண்டிய காரணத்தினால் இந்த கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க முடியாமல் போயிருந்தது.
இந்நிலையில் அந்த ஆவணங்கள் தற்போது பெறப்பட்டு அந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
எனவே, இந்த நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்க முடியும்.
அதேநேரம் ஒரு வருட காலத்திற்குள் மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுனில் குமார கமகே குறிப்பிட்டுள்ளார்.




