அனுராதபுரம் – ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை குறித்த பகுதியில் உடனடியாக வெளியேறுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் IX ஆம் அத்தியாயத்தின் 106 (1) ஆம் பிரிவின் கீழ், அவசர சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்காக தற்காலிகமாகப் பிறப்பிக்கப்படும் கட்டளையாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் உதித நிசாந்த ஆகியோருடன் தங்கியுள்ள அனைத்துப் பௌத்த துறவிகளும் ஏனைய நபர்களும் அங்கு அமைத்துள்ள தற்காலிகக் கூடாரங்களை அகற்றிவிட்டு, இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் புனிதப் பகுதி வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த வளாகத்திலிருந்து அமைதியான முறையில் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டபோதிலும், அவர்கள் வெளியேறாமல் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், ருவன்வெலிசாயவை வழிபட வரும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் பரிசோதகரினால் நீதிமன்றத்தில் கருத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, ருவன்வெலிசாய மற்றும் ஸ்ரீ மகா போதி உள்ளடங்கலாக முழுப் புனிதப் பகுதி வளாகத்திலிருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற வேண்டும்.
மேலும், புனிதப் பகுதியிலுள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித சேதமோ அல்லது அழிவோ ஏற்படுத்தக் கூடாது என்றும், அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூடாரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நீதிமன்றத்தினால் வேறு விதமான உத்தரவு பிறப்பிக்கப்படாத பட்சத்தில், இன்றைய தினம் முதல் 14 நாட்களுக்கு இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என நீதவான் தனது கட்டளையில் தெரிவித்துள்ளார்.




