கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாளை (அக்.16) நடத்த உள்ள மூவர்ணக் கொடி போராட்டத்துக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை, மத்திய அரசு பாதுகாப்பதாக அபிஜித் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) முக்கிய நிர்வாகிகளான அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் உள்ளிட்டோர், டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி கன்னோட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் நாளைய தினம் மூவர்ணக் கொடி போராட்டம் நடத்த அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், சிஜேபியின் இந்த போராட்டம் தங்கள் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றும், எனவே இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி கன்னோட் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த வணிகர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி நிதின் வாசுதேயோ சாம்ப்ரே மற்றும் நீதிபதி சஞ்சய் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “சிஜேபியின் இந்த போராட்டம் கன்னோட் பிளேஸில் உள்ள கடைகளின் வார இறுதி விற்பனையை பாதிக்கும். பண்டிகைக் காலத்தில் போராட்டம் காரணமாக வணிகர்கள் தங்கள் வணிகத்தை இழந்தால் அவர்கள் தெருவுக்குத்தான் வர வேண்டும். எனவே, இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அப்போது டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா, “சிஜேபியின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் அச்சம் கவனத்தில் கொள்ளப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையடுத்து தனது வாதத்தை முன்வைத்த மனுதாரரின் வழக்கறிஞர், அப்படியானால் இந்த போராட்டத்துக்குக் கட்டுப்பாடுகளையாவது விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது நீதிபதிகள், “இதை நீங்கள் வற்புறுத்த வேண்டாம். நாங்கள் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளோம்” என தெரிவித்தார். போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வணிகர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் போராட்டம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, “ஜந்தர் மந்தரில் மூவர்ணக் கொடியை அசைத்ததை குற்றம் என நரேந்திர மோடி அரசு கூறுகிறது. யாருக்காக… ஞானேஷ் குமாருக்காக.
மாணவர்கள், எதிர்க்கட்சிகள், முன்னாள் முதல்வர்கள் என பலரும் வீதிகளில் போராடுகிறார்கள். இந்த போராட்டங்களை ஒடுக்க டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் ரயில்வேயை மூடி, மெட்ரோவை மூடி, டெல்லியை எல்லையாக மாற்றி உள்ளது மோடி அரசு. யாருக்காக, ஞானேஷ் குமாருக்காக.
நரேந்திர மோடிக்கு ஞானேஷ் குமார் ஏன் முக்கியமானவராகிறார்? ஏனெனில், நரேந்திர மோடி தேர்தலில் வெற்றிபெற ஞானேஷ் குமார் உதவுகிறார். இதை நாம் நம்பக்கூடாதா? மோடி தேர்தலில் வெற்றிபெற உதவவில்லை என்றால் அவர் ஏன் ஞானேஷ் குமாருக்கு இவ்வளவு பாதுகாப்பு கொடுக்கப் போகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.




