முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவை அந்தஸ்தைப் பயன்படுத்தி ஆதனத்தை அடாத்தாக ஆட்சி புரிந்துள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தனது இடைக்காலக் கட்டளையில் தெரிவித்துள்ளது.
வழக்காளிகளான விஜிதா தியாகராஜா மற்றும் கணபதிப்பிள்ளை கேதீஸ்வரநாதன் ஆகியோர், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் தமக்குச் சொந்தமாக உள்ள ஆதனத்தை (சிறிதர் தியேட்டருக்கு எதிரில் உள்ள கடை) டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களுக்கு மேலாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவதாக நீதிமன்றத்தில் முறைப்பாடு வழங்கியிருந்தனர்.
குறித்த ஆதனத்தை மீள ஒப்படைக்குமாறு பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்ததாகவும், 2015ஆம் ஆண்டு ஆதனத்தை மீள ஒப்படைப்பதாக டக்ளஸ் தேவானந்தா எழுத்துமூலம் உறுதியளித்த போதிலும், இதுவரை அதை ஒப்படைக்கவில்லை என்றும் வழக்காளிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கில் வழக்காளிகள் சார்பில் மனு மற்றும் பல ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், எதிராளியான டக்ளஸ் தேவானந்தா தரப்பிலும் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இதன்போதே, எதிராளியான டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்த காலங்களில் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி குறித்த ஆதனத்தில் அடாத்தாக ஆட்சிபுரிந்துள்ளார் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், வழக்காளிகள் கோரியதற்கு அமைய குறித்த ஆதனத்தில் மாற்றங்களைச் செய்வதற்கும், ஆதனத்தை உரிமை மாற்றம் செய்வதற்கும், எதிராளியான டக்ளஸ் தேவானந்தாவால் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தடை விதித்து இடைக்காலக் கட்டளையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.




