12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில் முன்னெடுப்பு
12 நாட்கள் பசிமறந்து நல்லூர் வீதியில் உயிர்துறந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
தியாக தீபம் திலீபன் அவர்கள், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை, நல்லூர் ஆலய முன்றலில் நீராகாரம்கூட அருந்தாமல், அகிம்சை வழியில் தனது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், பிரித்தானியா முழுவதும் “12 நாட்கள், 12 கருப்பொருள்கள், 12 இடங்கள்” என்ற அடிப்படையில் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டமும் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தச் செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு இன்று லண்டனில் உள்ள டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் இடம்பெற்றது.
முதல் நாள் கருப்பொருளாக,
“தந்தை செல்வா காலத்து தமிழ் மக்களின் அகிம்சைவழி அரசியல் போராட்டங்கள்”
என்ற தலைப்பு முன்னிறுத்தப்பட்டது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகங்கள், அமைதிவழிப் போராட்டங்கள், அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஜனநாயகப் போராட்டங்களின் வரலாற்று முக்கியத்துவம் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.
தந்தை செல்வாவின் அகிம்சைவழி அரசியல் மரபிலிருந்து தியாக தீபம் திலீபன் அவர்களின் 12 நாள் உண்ணாவிரதப் போராட்டம் வரை தொடரும் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றையும் அதன் படிப்பினைகளையும் புதிய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதே இச்செயற்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள், தாயக விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்களை மனதில் நிறுத்தி, அக வணக்கத்துடன் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
தொடர்ந்து, தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், வரலாற்றுப் போராட்டங்கள் மற்றும் தியாக தீபம் திலீபன் அவர்களின் தியாகம் தொடர்பான விழிப்புணர்வு உரைகளும் நினைவுப் பகிர்வுகளும் இடம்பெற்றன.
மேலும், பதாகைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் வரலாறும் உரிமைக் கோரிக்கைகளும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இறுதியாக, உறுதியேற்புடன் முதல் நாள் நிகழ்வு நிறைவடைந்தது.
1987ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபன் அவர்கள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகளில் ஒன்றுகூட, 39 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த 12 நாள் நினைவேந்தல் மற்றும் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம், செப்டம்பர் 26ஆம் திகதி வரை, பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு நாளும் தனித்துவமான கருப்பொருளுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.




