காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

Date:

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகளவில் பங்கேற்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
ஒவ்வொரு குழுவிலும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வயது, காணாமல் போன காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்த பெற்றோர்களாகவும் உறவினர்களாகவும் காணப்பட்டனர். பல வருடங்களாக தமது பிள்ளைகள் மற்றும் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் அவர்கள், தமக்கு பணம் அல்லது இழப்பீடு தேவையில்லை என்றும், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்பதே தங்களது ஒரே கோரிக்கை என்றும் உருக்கமாக தெரிவித்தனர்.
“பல வருடங்களாக வந்து பதிவு செய்கிறோம்; ஆனால் எங்களுக்கு இன்னும் எமது பிள்ளைகள் பற்றிய பதில் கிடைக்கவில்லை” என மனவேதனையுடன் தெரிவித்த உறவினர்கள், தற்போது தாங்கள் வயது முதிர்ந்த நிலையில் இருப்பதாகவும், தங்களுக்குப் பின்னர் தமது பிள்ளைகளின் கதையை யார் பேசுவார்கள் என்ற கவலையும் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
“இப்போது எஞ்சியிருப்பது நாங்கள் மட்டுமே. நாங்களும் இல்லாமல் போனால், எங்களுடைய பிள்ளைகளின் கதைகளும் முடிந்துவிடும்” என்ற அவர்களின் கண்ணீர் கலந்த வார்த்தைகள், பல ஆண்டுகளாக நீடித்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வலியையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தின.
காலம் கடந்து சென்றாலும் தமது உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் தேடும் இந்த குடும்பங்கள், தங்களது பிள்ளைகள் உயிருடன் உள்ளார்களா அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான உறுதியான பதிலை வழங்க வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்