இந்தியாவுக்கு மருத்துவ உதவிகளைச் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து மருத்துவ உதவிகள் வந்துகொண்டே இருக்கின்றன.
தினசரி ஒரு விமானத்தில் மருந்துப் பொருள்கள், ஒக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் கடந்த 15 நாள்களாக இந்தியாவுக்கு வந்துகொண்டே இருக்கின்றன.
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடியுடன் நீண்ட நேரம் பேசியதோடு, கொரோனா பரவலைத் தடுக்க இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என உறுதி அளித்தார். இரு நாடுகளும் இணைந்து இந்த வைரஸை ஒழிக்க கூட்டாக பாடுபடுவோம் என்றார்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் தீவிரமாக இருந்தபோது இந்தியா தேவையான உதவிகளை அளித்தது. தற்போது இந்தியாவுக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது. அதை நாமும் அளிப்போம் என்று அதிபர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நட்பு நாடான இந்தியாவுக்கு அமெரிக்க அரசு அறிவித்துள்ள உதவிகளோடு, நிறுவனங்களும், இந்திய-அமெரிக்க வர்த்தக கூட்டமைப்புகளும் உதவிகளை தொடர்ந்து அளித்து வருகின்றன.
அமெரிக்க அரசு 10 கோடி டாலர் மருத்துவ உதவிகளை அளிப்பதாக அறிவித்துள்ளது. இத்துடன் மருந்து தயாரிப்பு நிறுவனமான பைஸர் 7 கோடி டாலர் உதவி மற்றும் 4.5 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளையும் அனுப்பியுள்ளது. ஒரு குப்பியின் அமெரிக்க அரசு கொள்முதல் விலை சுமார் ரூ.29,250 ஆகும்.
இதுதவிர போயிங், மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் தலா ஒரு கோடி டாலர் (ரூ.75 கோடி) நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளன. கூகுள் நிறுவனம் 1.8 கோடி டாலர் அளித்துள்ளது. இதுதவிர முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்கள் அடங்கிய சர்வதேச குழு 3 கோடி டாலருக்கு மருந்து பொருள்களை அனுப்புவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு அமெரிக் காவிலிருந்து கிடைக்கும் உதவிகளின் மொத்த மதிப்பு இம்மாத இறுதிக்குள் 100 கோடி டாலரை எட்டிவிடும் (ரூ.7,500 கோடி) என்று அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டமைப்பின் தலைவர் முகேஷ் ஏஹி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவுக்கான உதவித்தொகை மிக அதிக அளவில் உள்ளதாக அமெரிக்க இந்திய வர்த்தகக் கவுன்சிலின் தலைவர் நிஷா தேசாய் பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரபல கொடையாளர் ரங்கசாமி மூலமாக 15 லட்சம் டாலர் தொகையை சில மணி நேரங்களிலேயே தமிழகத்துக்காக திரட்டியுள்ளது.