யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும், தமிழ் மக்கள் கூட்டணிக்குமிடையில் உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று (11) மாலை இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம்- நல்லூர் பிரதேசசபையை இரு கட்சிகளும் தலா 2 வருடங்கள் வீதம் பங்கிட்டு ஆட்சியமைக்கவுள்ளன. முதலாவது 2 வருடம் தமிழ் மக்கள் கூட்டணியின் தவிசாளரும், இலங்கை தமிழரசு கட்சியின் உப தவிசாளரும், இறுதி 2 வருடங்கள் தமிழரசு கட்சியின் தவிசாளரும், தமிழ் மக்கள் கூட்டணியின் உப தவிசாளரும் நியமிக்கப்படுவார்கள்.
இதற்கு பிரதியுபகாரமாக- யாழ்ப்பாணத்தின் ஏனைய சபைகளில் உதிரிகளாக தெரிவாகியுள்ள தமிழ் மக்கள் கூட்டணி பிரதேசசபை உறுப்பினர்கள், இலங்கை தமிழ் அரசு கட்சியை ஆதரிப்பார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் க.வி.விக்னேஸ்வரன், பெண்ணொருவருக்கு “வாழ்வாதார உதவியாக வழங்கிய மதுபானச்சாலை உரிம சிபாரிசு“ விவகாரத்தை சுமந்திரன் கடுமையாக விமர்சித்தார். விக்னேஸ்வரன் தரப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மணிவண்ணன் அணியை “மான்குட்டிகளை ஓடஓட விரட்டுவோம்“ என மேடையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.




