அண்மையில் இந்தியாவும், பாகிஸ்தானும் தமது எல்லையை ஒட்டி சிறிய உராய்வில் ஈடுபட்டன. இரு தரப்பும் மிகச்சிறியளவில் மோதிக்கொண்டாலும், ஊடக விளம்பரப்படுத்தல்கள் மூலம் இரு நாட்டு அரசுகளும், தமது மக்களை ஒருவித தேசியவாத போதையில் ஆழ்த்தியிருந்தன.
இதன்மூலம், தமது நாட்டின் தாக்குதலில் மற்ற நாடு பேரழிவை சந்தித்தது என இரு நாட்டு மக்களும் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டுள்ளனர்.
இதுஇவ்வாறு இருக்க, உராய்வில் ஈடுபட்ட இரு நாடுகளையும் போர் மனநிலையிலிருந்து விலக வைத்திருந்தது அமெரிக்கா. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் அறிவிப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில்- இரு நாட்டு போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதன் பின்னரே இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு பெரிய அதிருப்தி இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இந்தியாவுக்கு பெரிய அப்செட். போர்நிறுத்தத்தை பாகிஸ்தான் பணிந்ததாக சித்தரிக்க முயன்றதோ அல்லது மக்களின் போர் மாயை விலகாமல் இருக்க வேண்டுமென நினைத்ததோ என்னவோ, அமெரிக்கா முதலில் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டதில் இந்தியாவுக்கு பெரிய அதிருப்தி.
இந்த பின்னணியில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை உடனடி போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைத்தது எப்படி என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். கிட்டத்தட்ட மிரட்டல் பாணியில் இரு நாடுகளையும் அவர் பணிய வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்காவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ட்ரம்ப், “இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமை அசைக்க முடியாததாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்… நாங்கள் நிறைய உதவி செய்தோம், மேலும் வர்த்தகத்திலும் உதவினோம். நான் சொன்னேன், வாருங்கள், நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம். அதை நிறுத்துவோம்… நீங்கள் அதை நிறுத்தினால், நாங்கள் வர்த்தகம் செய்கிறோம். நீங்கள் அதை நிறுத்தாவிட்டால், நாங்கள் எந்த வர்த்தகமும் செய்யப் போவதில்லை.”
நான் பயன்படுத்திய விதத்தில் யாரும் வர்த்தகத்தை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை… திடீரென்று அவர்கள், “நாங்கள் நிறுத்துவோம் என்று நினைத்துள்ளார்கள், அவர்கள் நிறுத்தியிருக்கிறார்கள்” என்று கூறினர்.
சனிக்கிழமை (மே 10), டிரம்ப் ட்ரூத் சோஷியலில் பதிவிட்டு, “அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடந்த நீண்ட இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்தியதற்காக இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
போர் மூலம் மக்கள் மத்தியில் தேசியவாத மாய வலையை விரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியாவுக்கு, ட்ரம்பின் வெளிப்படுத்தல் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.




