தோப்பூர், பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையாகிய 38 வயதுடைய கூலித் தொழிலாளி கந்தசாமி சுரேஸ் என்பவர், நேற்றைய தினம் (26) தோப்பூர் பகுதியில் கூலி வேலைக்காகச் சென்றுவிட்டு மாலை 6.30 மணியளவில் வீடு திரும்பும் வழியில், பாட்டாளிபுரத்துக்கும் தோப்பூருக்கும் இடையிலான காட்டு வழிப் பாதையில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தற்போதைய தகவலின்படி, கிராம மக்களின் உதவியுடன் அவர் உடனடியாக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையை அடையும் முன்னரே உயிரிழந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன்ஸ்
குறித்த காட்டு வீதியில் இதற்கு முன்பாகவே பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த மூவர் யானை தாக்குதலிற்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த பகுதியில் தொடர்ச்சியாக யானை தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், யானை வேலி அமைக்க வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை இதனைப் பொருட்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியல் கட்சிகளோ, அரசியல் பிரதிநிதிகளோ நடவடிக்கை எடுக்காதது மிகுந்த வேதனைக்குரிய விடயமாக உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



