வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சில வழிபாட்டு ஸ்தலங்கள் (விகாரைகள்) இன மற்றும் மத பிளவுகளை உருவாக்கக்கூடியவை என்பதால், அவை தொடர்பாக உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில், இந்த விவகாரம் சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, மதவாதம் மற்றும் இனவாதம் அரசியலில் இருந்து முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்றும், வடக்கில் மக்களின் உண்மையான தேவைகளை கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் இலாபத்திற்காக சிலர் இத்தகைய விவகாரங்களை அரசியல் முரண்பாடுகளாக உருவாக்க முயல்கின்றனர். இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் கண்டிப்பாக கூறியுள்ளார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்கும் விவகாரம் தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முப்படையினரின் பாவனையில் உள்ள காணிகள் மீதான மதிப்பீட்டை மீண்டும் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, எதிர்காலத்தில் உரிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.




