அரசு நிறுவனங்களின் இலட்சினைகளைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக பரப்பப்படும் விளம்பரங்கள், தனிப்பட்ட தரவுகளை திருடும் மோசடியாக மாறி வருகின்றன.
கடந்த சில நாட்களில் இவ் வகையான மோசடி சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாக, இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையைப் பயன்படுத்தி தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஒரு வேலை வாய்ப்பு விளம்பரம் மோசடியானதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி பரப்பப்பட்ட இந்த விளம்பரம், ஒரு போலியான விளம்பரமென மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இலட்சினையைப் பயன்படுத்தி இதேபோன்ற வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுபோன்று அரசின் இலட்சினையைப் பயன்படுத்தி வெளியிடப்படும் போலி விளம்பரங்களுக்கு பதிலளிப்பது பொருத்தமற்றது என, சாருகா தமுனுபொல குறிப்பிட்டுள்ளார். “போலி வலைத்தளங்கள் மூலம் பெரும்பாலும் தேசிய அடையாள அட்டையின் நகல்கள், பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள்” போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“எந்த சூழ்நிலையிலும் அத்தகைய வலைத்தளங்களைப் பார்வையிட்டு தனிப்பட்ட தகவல்களை வழங்கக்கூடாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.




