மக்களுக்கு பயனுள்ளதாகவும் விரைவான சேவையை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்தில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் 7ம் திகதி அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, இதுவரை கொழும்பில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதிய அலுவலகத்தின் சேவைகள், நாடளாவிய ரீதியில் உள்ள 361 பிரதேச செயலக அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐந்து பிரதேச செயலகங்களில் முன்னோடித் திட்டமாக இது ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், புதிய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வலையமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான சேவைகளை வழங்கும்வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரொஷான் கமகே தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், நோய்க்கு அமைவான நிதிக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களின் ஊடாக மேற்கொள்ள முடியும். மேலும், தேவையான ஆவணங்களை உடனடியாக பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் 7ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம், மக்களின் தேவைகளுக்கு நேரடியாக உத்தரவாதம் அளிக்கும் வகையில், ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.