கொரோனா பெருந்தொற்று மற்றும் சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாக கையாள்வதாக குற்றம்சாட்டிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இத்தகைய அறிவிப்பு பின்னணியில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு சில மணி நேரங்களில், ட்ரம்ப் இந்த முக்கிய முடிவை அறிவித்தார். அமெரிக்காவின் விலகும் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, இந்நடவடிக்கை வருத்தம் அளிப்பதாகவும், முக்கிய நன்கொடையாளரை இழப்பது கடினமானது என்றும் கூறியுள்ளது.
அமைப்பிலிருந்து விலகும் முன்பு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில், அமெரிக்கா தனது நிலுவை நிதியையும் செலுத்த வேண்டியது அவசியமாகும். உலக சுகாதார அமைப்பின் மொத்த நிதியில் 18 சதவீதம் அளவுக்கு நிதியுதவியை வழங்கி வரும் அமெரிக்காவின் விலகுதல், அமைப்பின் செயல்பாடுகளிலும், உலக சுகாதார முயற்சிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவின் விலகல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.