அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் திருடிய மாட்டினை இறைச்சியாக வெட்டிய நிலையில், சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாட்டினை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற ஏழு மாதமேயான கன்று, இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதன் உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டினையடுத்து, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில், கிடைத்த இரகசிய தகவலில், சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, மாட்டிறைச்சி மற்றும் மாட்டினை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஒரு அறையில் இருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 47 கிலோ 600 கிராம் மாட்டிறைச்சி, மற்றும் வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இச் சம்பவத்தில் 32 வயதுடைய சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சான்றுகள் தொடர்பான தகவல்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.