நேற்றைய தினம் (20) கிழக்கு மாகாண சபையின் அமைச்சு செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க மற்றும் ஆளுநரின் செயலாளர் திரு. ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தின் போது, அரச நிறுவனங்களில் தூய்மை இலங்கை (Clean Sri Lanka) திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு செயலமர்வுகளை நடாத்துவது தொடர்பில் அமைச்சு செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ஆளுநர், “தூய்மை இலங்கை திட்டம் என்பது குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தமாக்குவதோடு மட்டுமல்லாமல், சமூக மற்றும் மனப்பான்மை மேம்பாட்டை நோக்கி செயல்படும் நீண்டகால திட்டமாகும்” என்றார்.
கூட்டத்தின் போது, மாகாண சபை அளவிலான செலவின கட்டுப்பாட்டின் அவசியம் மேலும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, தொடர்ந்து ஏற்படும் செலவினங்களை குறைப்பதில் தலைவர்களுக்கான பொறுப்புகளை ஆளுநர் தெளிவுபடுத்தினார்.
ஆளுநர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சிகள் எடுத்துக்காட்டாக கூறப்பட்டன. அக்டோபர் 2024க்கு முன்பு, அலுவலக வாகனங்களுக்கான எரிபொருள் செலவு மாதாந்திரம் ரூ. 1.6-2 மில்லியன் இருந்தது. ஆனால், தற்போதைய நடவடிக்கைகள் மூலம் இச் செலவுகள் மாதம் ரூ. 2-3 இலட்சங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
மாகாண சபைக்குச் சொந்தமான பழுதடைந்த வாகனங்களை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், மேலும் பராமரிக்க முடியாத வாகனங்களை சட்டப்பூர்வமாக ஏலத்தில் விடவும் ஆலோசனை வழங்கப்பட்டது. அதுவே, உத்தியோகபூர்வ இல்லங்களின் பராமரிப்பு பற்றிய கவனம் அதிகரிக்கவும், அவற்றின் பாழடைந்த நிலையைத் திருத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில், மாகாண அமைச்சுக்கள் மற்றும் துறைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் திணைக்கள தலைவர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டமை குறிப்ப்பிடத்தக்கதாகும்.