கைதடி ஐக்கிய மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில், கைதடி சைவ ஐக்கிய சங்க மண்டபத்தில், அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவின் வகிபாகமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வில், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் வடகிழக்கு மாகாண விவசாய மேம்பாட்டு கழக உறுப்பினர் தனபாலசிங்கம் துளசிராம் ஆகியோர் சிறப்புரையாற்றியிருந்தார்கள்.
கலாநிதி அகிலன் கதிர்காமர் தனது உரையில், அரிசியின் அரசியல் முக்கியத்துவத்தை விளக்கினார். 1953ல் அரிசி விலையினை சடுதியாக உயர்த்தியதற்கான எதிர்ப்பில் ஏற்பட்ட ஹர்த்தால், அன்றைய அரசின் சரிவுக்குச் செல்ல காரணமாக இருந்ததுடன், அதன்பின் இலங்கையில் அரிசி தன்னிறைவின் வளர்ச்சியும் அதிகரித்தது என வரலாற்று நிகழ்வுகளை பகிர்ந்தார். 25% மாக இருந்த வளர்ச்சி சில தசாப்தங்களாக 90% மாக அதிகரித்திருந்தது என்பதை விளக்கியிருந்தார்.
தொடர்ந்தும், இன்றைய நிலைமையில், நாட்டின் உணவுப் பாதுகாப்பில் அரிசி முக்கிய இடத்தை வகிக்கிறது. அரிசி போதுமான அளவு உற்பத்தி செய்யப்பட்டாலும், விநியோக முறைகளின் குறைபாடுகள் காரணமாக மக்களுக்கு உரிய முறையில் சென்றடைவதில் சிக்கல்கள் உள்ளன என தெரிவித்திருந்தார்.
“இதனை தீர்ப்பதற்கான நெருக்கடி நிலைமையில், கூட்டுறவின் பங்கு மிக முக்கியமானதாகும். கூட்டுறவுகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, உணவு பாதுகாப்பிற்காக அரிசி விநியோகத்தை சீர்செய்யும் பொது நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும். கூட்டுறவின் மூலம், சந்தை விலையை தீர்மானிக்கும் சக்தியாக மாற முடியும்” என அவர் வலியுறுத்தினார்.
வடக்கு கூட்டுறவின் திறனை துல்லியமாக விளக்கிய அவர், முழு திறனில் இயங்கும் 16 கூட்டுறவின் அரிசி ஆலைகள் ஆண்டுக்கு 10,000 மெற்றிக் தொன் நெல் பதுக்க முடியும் என்ற ஆய்வு முடிவுகளை பகிர்ந்தார்.
பதிலுரையாற்றிய தனபாலசிங்கம் துளசிராம், “அரிசி விவசாயிகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு, நெல்லை சந்தைப்படுத்த நியாயமான விலை பெற முடியும்” என்று தெரிவித்தார். மேலும், விரைவில் அரசாங்கம் நெல்லுக்கான விலையை அறிவிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பெரும் போக அறுவடை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அரசாங்கம் கூட்டுறவின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றார்.
இச்சூழலில், கூட்டுறவுகள் விவசாயிகளின் நலனில் உறுதியாக நின்று, நிலையான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும் என இரு பிரமுகர்களும் குறிப்பிட்டிருந்தனர்.