வடமத்திய மாகாணத்தில் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் ஒருவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதம் பத்தாம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த குறித்த பரீட்சைகளின் விடைத்தாள்களே சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆறாம் ஏழாம் வகுப்பு புவியியல் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை சமூக ஊடகங்களில் கசிய விட்ட குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வடமத்திய மாகாண கல்வி செயலாளர் சிறிமேமன் தர்மசேன அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதினோராம் தரத்திற்கான பருவத்தேர்வுகள் அடுத்த பத்து நாட்களுக்குள் நடத்தப்படும் என்று வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கசிந்ததாக கூறப்படும் தேர்வு தாள்கள் மீண்டும் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதினோராம் வகுப்பு சிங்கள இலக்கியம், அறிவியல் மற்றும் ஆங்கிலத் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததற்கான விசாரணை அனுராதபுரத்தில் உள்ள மூத்த போலீஸ் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் அனுராதபுர மாவட்டம் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தரம் 11ற்கான அனைத்து தேர்வுகளும் மறு அறிவித்தல் வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.