ஹட்டன் இலங்கை போக்குவரத்துசபை பேருந்து தரிப்பிடத்திற்கு பின்னால் சிறுநீர் கழித்த இ.போ.ச பேருந்து சாரதியை ஆட்சேபித்த, பேருந்து நிலைய கடை உரிமையாளரை அடித்து காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (28) மாலை 5 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் இ.போ.ச டிப்போவின் சாரதி ஒருவர் பேருந்து தரிப்பிடத்திற்கு பின்னால் சிறுநீர் கழித்தமை தொடர்பில் கடை உரிமையாளர் சாரதியிடம் சென்று, பேருந்து நிலைய பகுதியில் அதிகளவான மக்கள் சுற்றித்திரிவதாக தெரிவித்தார். மேலும் பேருந்து நிறுத்தம், பொது இடங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகளுக்கு வருவதால் இந்த பகுதியில் சிறுநீர் கழிப்பது சரியல்ல என தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த சாரதியால், உரிமையாளர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பின்னர், அவ்விடத்திற்கு வந்த மற்றுமொரு இ.போ.ச சாரதி கடை உரிமையாளரைத் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த கடை உரிமையாளர் டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹட்டன் இ.போ.ச டிப்போவின் சாரதிகள் இருவர் கடை உரிமையாளரை தாக்கும் காட்சி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடையொன்றின் பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.