முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, நுகேகொட, மிரிஹானவில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடு இல்லாத SUV வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று மாலை நுகேகொட மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நவம்பர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார் .
ஒக்டோபர் 26ஆம் திகதி மிரிஹானவில் உள்ள அவரது மனைவி சஷி பிரபா ரத்வத்தவின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத வெள்ளை நிற Lexus SUV ரக வாகனம் தொடர்பில் ரத்வத்த நேற்று (31) காலை கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மிரிஹான, எம்புல்தெனிய, ஷாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று இருப்பதாக மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் வாகனம் சிக்கியது.
பதிவு செய்யப்படாத SUV தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம், மிரிஹான பொலிஸார் சம்பவம் தொடர்பில் நுகேகொட நீதவான் நீதிமன்றில் அறிவித்து பின்னர் வீட்டுக்குச் சென்று பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை சோதனையிட்டனர். மிரிஹானவில் உள்ள வீடு ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமானது என பொலிஸ் அதிகாரிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில் தனது மனைவியின் தாயார் வசிப்பதாகவும், அண்மையில் கண்டி மஹய்யாவ பகுதியில் ரத்வத்த என்பவருக்கு சொந்தமான வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தற்கொலை செய்துகொண்ட லோகன் ரத்வத்தவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மூன்று வாரங்களுக்கு முன்னர் மிரிஹானவில் உள்ள தனது மனைவியின் வீட்டுக் கராஜில் தனக்குத் தெரிவிக்காமல் காரை நிறுத்தியிருந்தார் என்றும் ரத்வத்தை ஒரு கதையை கூறியிருந்தார்.
கோட்டாவின் ஆட்சியில் இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட லொஹான் ரத்வத்த, மதுபோதையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் புகுந்து தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து, சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.