நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றுள்ளது.
இதன்மூலம் 2 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் 2 ஆட்டங்களிலும் இலங்கை வெற்றிபெற்றுள்ளது.
நியூசிலாந்து நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் 199/5 என்ற நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்று காலையில் ஆட்டம் ஆரம்பித்ததும் ப்ளன்டெல் 60, பிலிப்ஸ் 76, சான்ட்னர் 67 என அரைச்சதமடித்து ஆறுதலளித்து ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து 360 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை தரப்பில் நிஷான் பீரிஸ் 170 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டையும், பிரபாத் ஜெயசூர்ய 139 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. கமிந்து மென்டிஸ் 182, டினேஸ் சண்டிமால் 116, குசல் மென்டிஸ்106, மத்யூஸ் 88 ஓட்டங்களை பெற்றனர்.
பின்னர், நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 88 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பிரபாத் ஜெயசூரியா 6-42, பீரிஸ் 3-33 என விக்கெட் வேட்டை நடத்தினர்.
இலங்கைக்கு, இது தொடர்ச்சியாக மூன்றாவது டெஸ்ட் வெற்றியாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இலங்கைக்கு இன்னும் நான்கு போட்டிகள் உள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புக்களும் உள்ளன. இலங்கை ஏனைய போட்டிகளில் வெற்றிபெறுவது மாத்திரமல்ல, ஏனைய அணிகளின் முடிவுகளும் இதில் செல்வாக்கு செலுத்தும்.
அறிமுக ஆட்டக்காரர் நிஷான் பீரிஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 203 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை எடுத்தார்.
போட்டியின் நாயகன் கமிந்து மென்டிஸ். தொடர் நாயகன் பிரபாத் ஜெயசூர்ய.
2024ல் இலங்கைக்கு 6 டெஸ்ட் வெற்றிகள் கிடைத்துள்ளன. ஒரு ஆண்டில் இலங்கை பெற்ற 2வது அதிகபட்ச வெற்றி இதுவாகும். 2001ல் விளையாடிய 13 டெஸ்டில் 8ல் வெற்றி பெற்ற இலங்கை, 2006ல் 11 போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்றது.
காலியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. எதிரணிக்கு எதிராக ஒரு மைதானத்தில் ஒரு அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். அவுஸ்திரேலியா பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், தென்னாப்பிரிக்கா செஞ்சுரியன் பார்க்கில் இலங்கைக்கு எதிராக தலா 5 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளன.
பிரபாத் ஜெயசூர்யா தனது 16 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தான் விளையாடிய முதல் 16 டெஸ்டில் பிரபாத்தை விட ஒரே ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே அதிக அதிக விக்கெட் எடுத்துள்ளார். ஜார்ஜ் லோமன் (101).
நிஷான் பீரிஸ் காலியில் தனது முதல் டெஸ்டில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2022ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரபாத் 12 விக்கெட்டுகளையும், 2021ல் பங்களாதேஷுக்கு எதிராக பிரவீன் ஜெயவிக்ரம 11 விக்கெட்டுகளையும் இலங்கை அணிக்காக அறிமுகமான போது இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
அறிமுக டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இலங்கை வீரர் பீரிஸ் ஆவார்.
காலி மைதானத்தில் இலங்கையின் முதல் இன்னிங்ஸ் பெற்ற 514 முன்னிலையானது டெஸ்ட் வரலாற்றில் எந்தவொரு அணிக்கும் ஐந்தாவது அதிகபட்சமாகும். 1938-ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்த 702 ரன்கள்தான் அதிகபட்சம். 2வதாக, 2006 ஆம் ஆண்டு கொழும்பு டெஸ்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 587 ரன்களை இலங்கை பெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸில் பெற்ற 88 ஓட்டங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அவர்கள் பெற்ற மிகக் குறைந்த ஸ்கோராகும். 1992 இல் கொழும்பின் சிங்கள விளையாட்டுக் கழகத்தில் 102 ஓல்-அவுட் ஆனது அவர்களின் முந்தைய குறைந்த பட்சம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 எதிரணிகளுக்கு எதிராக 600-க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்ற முதல் அணி இலங்கையாகம். காலியில் இலங்கை முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 602 ரன்கள் எடுத்தது, நியூசிலாந்திற்கு எதிராக இலங்கையின் முதல் 500-க்கும் அதிகமான ஸ்கோராகும். அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக இலங்கை அணி 600-க்கும் மேற்பட்ட ரன்களை எடுக்கவில்லை.